தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026க்கான திமுகவின் தேர்தல் அறிக்கையை மக்களுடன் இணைந்து தயாரிக்கும் நோக்கில், முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் ஜனவரி 3 ஆம் தேதி பிரத்யேக மொபைல் செயலி, செயற்கை நுண்ணறிவு (AI) போர்ட்டல், வாட்ஸ்அப், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட பல்வேறு தளங்களை அறிமுகப்படுத்தினார்.
இந்த முயற்சி மூலம் தமிழக மக்களின் நேரடி கருத்துகள், கோரிக்கைகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்று, அவற்றை ஆய்வு செய்து தேர்தல் வாக்குறுதிகளாக சேர்க்க திமுக திட்டமிட்டுள்ளது.
செயலி மற்றும் இதர தளங்களை அறிமுகப்படுத்திய ஒரே நாளில் அதாவது ஜனவரி 3 ஆம் தேதி மட்டும் 14,318 கோரிக்கைகளும் பரிந்துரைகளும் பதிவாகியுள்ளன. இது மக்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலின் அறிவித்த ஓய்வூதிய திட்டம்... என்னென்ன அம்சங்கள்?.. முழு விவரம்...!
இதில் வாட்ஸ்அப் வழியாகவே 7,527 கோரிக்கைகள் வந்துள்ளன. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் வழியாக 2,645, சமூக வலைதளம் மற்றும் இணையதளம் வழியாக 2,015, தொலைபேசி வழியாக 1,188, கியூஆர் கோடு வழியாக 692, மின்னஞ்சல் வழியாக 251 என பல்வேறு வழிகளில் கோரிக்கைகள் பதிவாகியுள்ளன.

திமுக நிர்வாகிகள் இது குறித்து தெரிவிக்கையில், 2026ல் அமைய இருக்கும் திமுக அரசு பெருவாரியான மக்களின் பங்களிப்புடன் உருவாக வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் விரும்புவதால் இத்தகைய தொழில்நுட்ப அடிப்படையிலான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினர்.
தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு இந்த கோரிக்கைகளை ஆய்வு செய்து, பொருத்தமானவற்றை வாக்குறுதிகளாக இணைக்கும். இந்தியாவில் முதல்முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை தேர்தல் அறிக்கை தயாரிப்பில் பயன்படுத்துவது திமுகவின் இந்த முயற்சி என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களின் கருத்துகளைப் பெறுவதற்காக tnmanifesto.ai என்ற இணையதளம், சிறப்பு வாட்ஸ்அப் எண், மின்னஞ்சல் உள்ளிட்டவை தொடங்கப்பட்டுள்ளன. இது தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளதாக அரசியல் அவதானிகள் கருதுகின்றனர். திமுகவின் இந்த டிஜிட்டல் முயற்சி மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: போலீஸ் உஷாரா இருக்கணும்... பெண்கள், குழந்தைகள் விவகாரத்தில் கவனமாக இருக்க முதல்வர் அறிவுறுத்தல்...!