தமிழக அரசு அறிவித்துள்ள 3,000 ரூபாய் பொங்கல் பரிசுத் தொகை மக்களிடையே எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும், இது தேர்தலை முன்வைத்த வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி விமர்சித்துள்ளார்.
மதுரை அழகர் கோவில் சாலையில் உள்ள தனியார் உணவகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மதுரையில் நடைபெறவுள்ள புதிய தமிழகம் கட்சியின் 7-வது மாநில மாநாடு குறித்த விபரங்களை வெளியிட்டார். வண்டியூர் அருகே உள்ள திடலில் வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி இந்த மாநாடு மிக பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது. அப்போது பேசிய அவர், "தேர்தல் நெருங்கும் வேளையில் அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மற்றும் பொங்கல் பரிசு அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது. ஆனால், இந்த 3,000 ரூபாய் பரிசுத் தொகை என்பது மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானதல்ல" எனத் தெரிவித்தார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி, ஆன்மீக விவகாரங்களில் தமிழக அரசு தலையிடுவதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். குறிப்பாக, திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றப்படுவது குறித்த சர்ச்சையில், "இருளை நீக்கி ஒளி ஏற்ற வேண்டும் என்பதுதான் இயற்கையின் நியதி; பிரபஞ்சமே ஒளியால் ஆனதுதான். அப்படி இருக்கையில், நீதிமன்ற உத்தரவு இருந்தும் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றத் தடை விதிப்பது முறையல்ல" எனச் சாடினார். இந்த விஷயத்தில் தமிழக அரசு இவ்வளவு பிடிவாதமாக இருக்க வேண்டிய அவசியம் என்ன? என அவர் கேள்வி எழுப்பினார். ஆன்மீக நம்பிக்கைகளில் அரசு முட்டுக்கட்டை போடுவது சரியான நடைமுறை அல்ல என்றும் அவர் தனது கண்டனத்தைப் பதிவு செய்தார்.
இதையும் படிங்க: மின்சார வாகனங்களுக்கு தொடரும் மவுசு; 100% வரி விலக்கை 2027 வரை நீட்டித்து தமிழக அரசு அதிரடி!
மதுரை வண்டியூர் பகுதியில் நடைபெறவுள்ள தங்களது கட்சியின் 7-வது மாநில மாநாடு, தமிழக அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமையும் எனத் தெரிவித்த அவர், இதற்காகத் தொண்டர்கள் உற்சாகத்துடன் பணியாற்றி வருவதாகக் கூறினார். சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் புதிய தமிழகம் கட்சி தனது பலத்தை நிரூபிக்கும் வகையில் இந்த மாநாடு அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தமிழக அரசின் தற்போதைய செயல்பாடுகள் அனைத்தும் அரசியல் ஆதாயத்திற்காகவே செய்யப்படுகின்றன என்றும், மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண அரசு முன்வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்தப் பேட்டியின் போது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: “முழு கரும்பு.. பச்சரிசி.. சர்க்கரை!” 2026 பொங்கலுக்கு அரசு தரும் ‘ஸ்வீட்’ கிஃப்ட்! முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!