தேர்தல் சுற்றுப்பயணத்துக்கான அறிவிப்பை இன்று காலை வெளியிட்டிருந்தார் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அப்போது சுற்றுப் பயணத்துக்கான லோகோ மற்றும் பாடலையும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், தமிழக மக்களுக்கு அதிமுக தேர்தல் சுற்றுப்பயணம் குறித்து விவரித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், "என்னுள் கலந்திருக்கும் எனதருமைத் தமிழக மக்களே, உங்கள் அனைவருக்கும் எனது அன்பான வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவருக்கும் ஓர் இனிய செய்தியை சொல்லவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். இதை எழுதும்போதே எனது உள்ளம் மகிழ்ச்சியாலும் உவகையாலும் நிறைகிறது. என்னைப் பற்றி எல்லாமும் உங்களுக்குத் தெரியும்.
என்னிடம் எந்த ரகசியமும் இல்லை. என் உயிருக்கு நெருக்கமான உறவாக இருக்கின்ற உங்களோடு இருக்கவே நான் எப்போதும் ஆசைப்படுபவன். சாமானியனிலும் சாமானியனாக உங்களோடு கலந்து உறவாட விரும்புகிறவன். தமிழ்க் குடியினர் அனைவரும் தலைநிமிர்ந்து செம்மாந்து வாழ்வதற்கு எனது செயல்கள் அனைத்தையும் அர்ப்பணிக்க நினைப்பவன். எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் அமைத்துக் கொடுத்த லட்சியப் பாதையில் தமிழ் நாட்டை வழிநடத்த வேண்டும் என நித்தமும் உழைப்பவன். எனது தனிப்பட்ட வாழ்வும் அரசியல் வாழ்வும் வெவ்வேறானவை அல்ல. அவை ஒன்றோடு ஒன்று கலந்தவை என்பதை எனது நெஞ்சகத்தை அறிந்தவர்கள் நன்கு அறிவார்கள்.

ஓர் இனிய செய்தி சொல்கிறேன் என்று சொன்னேன் அல்லவா... அது என்னவென்றால், உங்கள் ஒவ்வொருவரையும் சந்திக்க உங்களைத் தேடி வருகிறேன். உங்கள் இல்லத்தையும், உள்ளத்தையும் தொட்டுப் பேச வருகிறேன். மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம் என்கிற எழுச்சிப் பயணத்தில் உங்களை எல்லாம் சந்தித்து உறவாட வருகிறேன். இந்தப் புரட்சிப் பயணத்தில் உங்களை எல்லாம் எழுச்சிமிக்கவர்களாக மாற்றுவது மட்டுமே எனது நோக்கம். வெற்றிகரமான ஒரு தமிழ் நாட்டை மீண்டும் உருவாக்குவதே எனது இந்தச் சுற்றுப் பயணத்தின் லட்சியம். இது எனது தனிப்பட்ட பயணம் அல்ல. ஒட்டுமொத்த தமிழ்நாடும் மாற்றத்தை நோக்கி நடக்கும் வெற்றிப் பயணம்! இது எனது தனிப்பட்ட சுற்றுப் பயணம் அல்ல... ஆட்சி மாற்றத்தையும் சமூக முன்னேற்றத்தையும் விரும்பும் ஒவ்வொரு தமிழரின் சுற்றுப் பயணம்.
இதையும் படிங்க: அவங்க இல்லாமல் ஜெயிக்க முடியுமா? பாஜகவை வம்புக்கு இழுக்கும் மூத்த பத்திரிகையாளர்!!
இந்தப் பயணம் 'ஸ்டாலின் அரசை வீழ்த்தும் பயணம்'. இந்தப் பயணம் மாநிலம் காக்க 'மாபெரும் பயணம்' இந்தப் பயணத்தில் உங்களை எல்லாம் மாற்றத்தை நோக்கி அழைத்துச் செல்லும் முன்னணிக் களவீரனாக நான் இருப்பேன்!. இந்தப் பயணப் போர்க்களத்தில், ஆளும் கட்சியின் கொடுமைகளையும், சிறுமைகளையும் எதிர்த்துப் போராடும் ஒரு சிப்பாயாக இருப்பேன். நடக்கும் அனைத்துக் கொடுமைகளுக்கும் எதிராக, உங்கள் கைகளோடு எனது கையையும் இணைத்து உயர்த்துவேன். உங்கள் எண்ணங்களோடு, எனது எண்ணத்தையும் இணைத்து சிறுமைகளுக்கு எதிராகக் குரலுயர்த்துவேன். உங்களில் ஒருவனாக உங்களோடு நிற்பேன்.

உங்கள் தோளோடு தோள் சேர்த்து ஒரு தோழனாக நிற்பேன். உங்கள் வீட்டுப் பிள்ளையாக, உங்களோடு உறவாடி நிற்பேன். உங்கள் குறைகளையும் கோரிக்கைகளையும் காதுகொடுத்துக் கேட்கும் சேவகனாக இருப்பேன். தமிழ்நாட்டு மக்களைத் தேடி வரும் இந்த எழுச்சிப் பயணம், உங்கள் பங்களிப்போடு ஒரு மாற்றத்தை நோக்கிய வெற்றிப் பயணமாக மாறும் என்பதில் எள் முனையளவும் எனக்கு சந்தேகமில்லை. இதற்கெல்லாம் முன்பாக, சில விஷயங்களையும் உங்களுக்குச் சுட்டிக்காட்ட சில விஷயங்களையும் உங்களுக்குச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். தனிமனித வளர்ச்சியிலும், கூட்டு வளர்ச்சியிலும் வீறுநடைபோட்ட தமிழ்நாடு இப்போது, சில விஷமிகளின் சுயநலத்தால் தள்ளாடுகிறது. மாலுமியை இழந்த கப்பல் போல இலக்கு தெரியாமல் தத்தளிக்கிறது.
ஆட்சி நடத்துகிறவருக்கு தமிழ் நாட்டு மக்களின் நலன் பற்றிய கவலை இல்லை. தன் பெண்டு - தன் பிள்ளை - தன் வளம் போன்றவை மட்டுமே லட்சியமாக இருக்கின்றன. அரசாங்கத்தின் அத்தனை பாகங்களிலும் மக்கள் மீதான அலட்சியம் குடியேறிவிட்டது. மக்கள் நலனுக்கு எதிரான ஊழல் கோரத் தாண்டவமாடுகிறது. எளியவர்கள் உயிரைத் துச்சமாக நினைக்கும் போக்கு ஆட்சியாளர் மனத்தில் நிறைந்துவிட்டது. தமிழ்நாட்டில் ஒடுக்கப்பட்டவர்களும், பாட்டாளி வர்க்கத்தினரும் இப்போது மகிழ்ச்சியாக இல்லையே..... ஏன்? ஒருசில கல்விக் கூடங்களும், சில சமூக ஊடகங்களும் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் கூடாரமாக தொடர்ந்து செயல்படுவது ஏன்? அமைதிப்பூங்காவான தமிழ்நாடு சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டாலும், போதைப்பொருள் பெருக்கத்தாலும் அல்லலுறுவது ஏன்?

அதிகாரத்தைக் காட்டி தனிமனிதச் சொத்துக்களை அபகரிப்பதை இந்த அரசு மூடி மறைப்பது எதனால்? அரசின் அச்சாணியாக இயங்கும் அரசு ஊழியர்களுக்கே பாதுகாப்பு இல்லை என்பது வெட்கப்படவேண்டிய செயல் அல்லவா? தமிழகத்தில் 'கமிஷன் - கலெக்ஷன் - கரப்ஷன்' இல்லாத துறைகளே இல்லை. இப்படிப்பட்ட அவல ஆட்சி தமிழகத்திற்கு தேவையா? படித்த இளைஞர்கள் வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இதை அரசு வேடிக்கை பார்ப்பது ஏன்? இப்படி, இந்த ஆட்சியில் விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், சிறுகுறு தொழில் முனைவோர், தொழிலாளர்கள் என்று அனைவருமே பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில் முதலீடு அண்டை மாநிலங்களுக்கு மாறுகிறது. இந்த அரசு, அனைத்துத் துறைகளிலும் தோல்வியையே கண்டுள்ளது. எனவே, திமுக அரசு அகற்றப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமல்லவா? சிறுமிகள் முதல் முதியவர்கள் வரை எவரும் தமிழ்நாட்டில் பாதுகாப்போடு நடமாட முடியவில்லை. சிறுவர்களைச் சிதைக்கிற பெருங்குற்றங்கள் அதிகரித்துவிட்டன.
முதியோர்கள் உயிரைத் தொடர்ச்சியாகப் பறிக்கிற ஈவு இரக்கமற்ற செயல்கள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. நாம் தமிழ் நாட்டில்தான் இருக்கிறோமா அல்லது ஈவு இரக்கமற்ற நீரோ மன்னனின் கொடுங்கோல் ஆட்சியில் இருக்கிறோமா என ஒவ்வொரு தமிழரும் சிந்திக்க ஆரம்பித்துவிட்டனர். மக்கள் மனத்தில் நீறுபூத்த நெருப்பாக வேதனை சூழ்ந்து கொண்டிருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஆளும் தி.மு.க அரசாங்கம் தமிழ்நாட்டு மாணவர்களின் கல்வியில் கூட அரசியல் செய்கிறது. போலி வாக்குறுதிகளைக் கொடுத்து பொய்யான ஆட்சி நடத்தும் மூடர்களின் கொட்டத்தை அடக்கி வீட்டுக்கு அனுப்ப, உங்களை எல்லாம் என்னோடு இணைந்து வர அழைக்கிறேன். அமைதியான தமிழ்நாடு, வளமான தமிழ்நாடு, நிறைவான தமிழ்நாடு; இவைதான் நமது லட்சியம். நாம் வெல்வது நிச்சயம். முடியாத கொடுமைக்கு முடிவுகட்டுவோம். விடியாத ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம். தீய சக்தியை வதைத்திட, நல்லாட்சியை விதைத்திட, விலகாத இருள் விலகட்டும், தமிழகத்தில் அஇஅதிமுக ஆட்சி மலரட்டும்' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: முடியாத கொடுமை... விடியா ஆட்சி... வீட்டுக்கு அனுப்புறது கன்ஃபார்ம்! இபிஎஸ் சூளுரை