கரூர்: கரூர் தவெக கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் இன்று பணி நியமன ஆணைகளை வழங்கினார். இந்த நிகழ்வின்போது ஒரு தாயின் உருக்கமான கண்ணீர் மல்கிய முறையீடு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருவளர் செல்வி என்ற இளம்பெண் தனது மகன் சனுஜ் வர்ஷன் கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்ததாகக் கூறினார். “என் கணவர் ரகுநாதன் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே என்னையும், குழந்தையையும் கைவிட்டுவிட்டு வேறொரு பெண்ணுடன் சென்றுவிட்டார். என் தாயின் உதவியுடன் தனியாக என் மகனை வளர்த்து வந்தேன். அவன் கரூர் கூட்டத்துக்கு என் சகோதரியுடன் சென்றபோது நெரிசலில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான்” என்று தெரிவித்தார்.
முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகள் கலெக்டர் அலுவலக அரங்குக்குள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது திருவளர் செல்வி தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாகவும், தன் கணவர் உள்ளே அனுமதிக்கப்பட்டதாகவும் குற்றம் சாட்டினார். கண்ணீர் மல்க “என் மகனைப் பார்க்காத, ஒரு நாள் கூட பள்ளிக்கு அழைத்துச் செல்லாத அவருக்கு எந்த அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படுகிறது?” என்று அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: போலீஸ் எங்களை அலர்ட் பண்ணி இருக்கலாம்?! கரூர் துயரத்திற்கு அவங்க தான் காரணம்! - முதல்வர் விஜய்!!

“எனக்கு ஆண் துணை யாரும் இல்லை. நியாயம் கேட்டால் யாரும் பதில் சொல்ல மறுக்கிறார்கள். எனக்கு நீதி வழங்க வேண்டும்” என்று கண்ணீருடன் முறையிட்டார். உயிரிழந்த மகனின் இறுதி சடங்கு உள்ளிட்ட நிகழ்வுகளின்போது அதிகாரிகளின் செயல்பாட்டில் மாற்றம் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழக அரசு இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை வழங்கும் முடிவை எடுத்துள்ளது. இன்று 32 பேருக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டன. இந்த நிவாரண நடவடிக்கை பல குடும்பங்களுக்கு ஆறுதல் அளித்தாலும், திருவளர் செல்வி போன்ற சிலருக்கு குடும்பப் பிரச்சினைகள் காரணமாக சிக்கல்கள் எழுந்துள்ளன.
இந்த சம்பவம் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதிகாரிகள் பாதிக்கப்பட்ட தாயின் முறையீட்டை பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துள்ளனர். கரூர் துயர சம்பவத்துக்குப் பிறகு அரசு வழங்கும் நிவாரணம் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் நியாயமாகக் கிடைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
இதையும் படிங்க: கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி! 32 பேருக்கு மட்டுமே அரசுப்பணி!! காரணம் இதுதான்!