தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 நெருங்கி வரும் வேளையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற முழக்கத்துடன் தொகுதி வாரியாக தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதுவரை 181 சட்டமன்றத் தொகுதிகளில் பிரசாரத்தை முடித்துள்ள அவர், கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் ஒரு தொகுதிக்காவது சென்று மக்களை சந்தித்துள்ளார்.
ஆனால், தலைநகர் சென்னைக்குள் இன்னும் நுழைய முடியாமல் தவித்து வருகிறார். சென்னை மாவட்டத்தில் உள்ள 8 மாவட்டச் செயலாளர்களின் விருப்பமின்மை மற்றும் எதிர்ப்பே இதற்கு முக்கிய காரணம் என்று கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சென்னை மாவட்டச் செயலாளர்கள் ஒன்றுகூடி எடுத்த முடிவு மிகவும் தெளிவானது: "தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரசாரம் செய்து கொள்ளலாம். இப்போது செலவு செய்ய வேண்டாம்!" இதற்கு பின்னணியில் பல காரணங்கள் உள்ளன. கரூர் உயிரிழப்பு சம்பவத்துக்குப் பிறகு பிரசாரக் கூட்டங்களுக்கு புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் கூடுதல் செலவு ஏற்படுகிறது. ஒரு மாவட்டச் செயலாளருக்கு 2 முதல் 3 கோடி ரூபாய் வரை செலவாகிறது என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: படர் தாமரை உடலுக்கு நாசம்! பாஜக தாமரை நாட்டுக்கே நாசம்! இபிஎஸ் - டிடிவி-யை வச்சு செய்யும் கருணாஸ்!
மேலும், சென்னை மாவட்டச் செயலாளர்கள் பெரும்பாலானோர் வரும் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளனர். தங்களுக்கான ஒரு தொகுதியை தேர்வு செய்து விட்ட நிலையில், மீதமுள்ள 8 தொகுதிகளில் பெரும்பாலானவற்றை கூட்டணி கட்சிகளுக்கு தள்ளிவிட பழனிசாமி முடிவு செய்துள்ளார்.

இதனால், "கூட்டணி கட்சிகளில் யாரோ போட்டியிடும் தொகுதிக்கு ஏன் நாம் இப்போது செலவு செய்ய வேண்டும்?" என்ற கேள்வி அவர்களிடம் எழுந்துள்ளது.
ஏற்கனவே பழனிசாமி சுற்றுப்பயணம் செய்த தொகுதிகளில் கூட பெரிய தாக்கம் ஏற்படவில்லை, செலவு தான் அதிகம் என்று பல மாவட்ட நிர்வாகிகள் குமுறுவதும் இங்கு குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் திருவள்ளூர், திருப்போரூர், சோழிங்கநல்லூர் போன்ற சென்னை புறநகர் தொகுதிகளில் பிரசாரம் செய்த பழனிசாமியால், சென்னை உள்ளே ஒரு தொகுதியில் கூட இதுவரை நுழைய முடியவில்லை.
தேர்தல் அறிவிக்கப்படும் முன் சென்னையில் சுற்றுப்பயணம் இருக்க வேண்டும் என்று மாவட்டச் செயலாளர்களிடம் பழனிசாமி தீவிரமாக பேசி வருகிறார். ஆனால், சென்னை மாவட்டச் செயலாளர்களின் ஒருமித்த எதிர்ப்பால் இந்த சுற்றுப்பயணம் கேள்விக்குறியாகி உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு மட்டுமே பிரசாரம் போதும் என்று அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
இது அதிமுகவுக்குள் உள்ள உள் மோதல்களையும், தேர்தல் செலவு குறித்த அதிருப்தியையும் வெளிப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன. 2026 தேர்தலுக்கு முன்பு இந்த சிக்கல் எப்படி தீர்க்கப்படும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
இதையும் படிங்க: அண்ணி இல்லை!! இனிமேல் அம்மா!! தேமுதிகவை வழிநடத்த பிரேமலதா புதுரூட்! கேப்டன் பணி தொடரும்!