தமிழ்நாட்டின் அரசியல் களம் எப்போதுமே பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஒரு மையமாகவே இருந்து வருகிறது. அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள், ஆர்ப்பாட்டங்கள், மற்றும் பொது இடங்களில் நடைபெறும் நிகழ்வுகள் அவ்வப்போது சர்ச்சைகளை உருவாக்குவது வழக்கமாக உள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரத்தின் போது ஆளில்லாத ஆம்புலன்ஸ் வந்ததால் ஆத்திரமடைந்த இபிஎஸ், மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இனி கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் வந்தால், அதை ஓட்டிட்டு வர்ற ட்ரைவரே அதில் பேஷண்டாகப் போகிற நிலைமை வரும் என்று பழனிச்சாமி பேசி உள்ளார். அது மட்டும் இல்லாமல் அந்த வாகனத்தின் நம்பரை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்றும் எப்போது தனது பிரச்சாரம் நடந்தாலும் அங்கு ஆம்புலன்ஸ் வருவதாகவும் கூறியிருந்தார். ஆளுங்கட்சியை கடுமையாக சாடி பேசிய எடப்பாடி பழனிச்சாமி ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்தச் சம்பவத்திற்கு எடப்பாடி பழனிச்சாமி அல்லது அவரது கட்சி சார்பில் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இருப்பினும், இது தொடர்பாக எதிர்க்கட்சிகளும், சமூக ஊடகப் பயனர்களும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் திருச்சியில் ஆம்புலன்ஸை அதிமுகவினர் தடுத்து நிறுத்திய சம்பவத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சட்டவிரோத சூதாட்ட வழக்கு.. கையும் களவுமாக சிக்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ..!!
திருச்சி துறையூரில் ஏற்பட்ட சாலை விபத்தில் சிக்கியவர்களை உயிர் காப்பாற்றும் நோக்கில் விரைந்து சென்ற ஆம்புலன்ஸை அதிமுகவினர் வழிமறித்து தடுத்து நிறுத்திய சம்பவம் மிகக் கடுமையான, நேயமற்ற செயல் என்று கூறியுள்ளார். அவசர சிகிச்சை பெற வேண்டிய உயிர்களை அரசியல் சண்டை, அல்லது குறுகிய மனப்பான்மையால் தடுக்க முயன்றது மனித நாகரிகத்திற்கே கேள்விக்குறி என்று கூறினார். மனித உயிரை விட அரசியலுக்கு முன்னுரிமை கொடுப்பது மனிதாபிமானத்துக்கு எதிரானது என்றும் தெரிவித்தார்.
இந்த அராஜகச் செயலுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் வன்மையான கண்டனங்களை தெரிவித்துக் கொள்வதாகவும், மனித உயிர் ஆபத்தில் இருக்கும் நேரங்களில் ஆம்புலன்ஸின் சுதந்திர உரிமையைத் தடுக்க நினைப்பது சட்ட ரீதியாகவும் குற்றம் என்றும் கூறினார். அதிமுகவினர் செய்த இந்த மிரட்டல் அரசியலை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் என்றும் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக உடனடி சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும், எதிர்காலத்தில் இத்தகைய நிகழ்வுகள் மீண்டும் நடைபெறாத வகையில் அரசு தக்க நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: தயாரா இருக்கோம்! துணை ஜனாதிபதி தேர்தல் ஒரு சித்தாந்த போராட்டம்.. KC வேணுகோபால் பரபரப்பு பேட்டி..!