பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் பிறந்த தினமான செப்டம்பர் 17-ம் தேதி, ஆண்டுதோறும் ஈரோட்டில் அவரது பிறந்தநாள் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த நாளை ஒட்டி திராவிடர் கழகம் உள்ளிட்ட முற்போக்கு அமைப்புகள் இணைந்து, பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள பெரியாரின் சிலைக்கு மாலை அணிவிப்பதும், அவரது இல்லத்திற்குச் சென்று அங்குள்ள சிலைக்கு மாலை அணிவிப்பதும் வழக்கம்.
அதேபோன்று, பேரணி நடத்துவதும் ஆண்டுதோறும் செப்டம்பர் 17-ம் தேதி நடைபெற்று வருகிறது. குறிப்பாக, தந்தை பெரியாரின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதற்காகவும், சேர்ப்பதற்காகவும், அவரது கொள்கைகள் மற்றும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் ஊர்வலம் நடத்துவதும் வழக்கம்.
ஆனால், இந்த ஆண்டு அதேபோன்று செப்டம்பர் 17-ம் தேதி பெரியாரின் பிறந்தநாளைக் கொண்டாடுவதற்கும், பேரணி நடத்துவதற்கும் திராவிடர் கழகம் சார்பில் அனுமதி கோரப்பட்டிருந்தது.
இதையும் படிங்க: பெரியார் சிலை விவகாரம்! கனிமொழி குறித்த சர்ச்சை பதிவு! எச்.ராஜாவுக்கு எதிரான 2 வழக்குகளில் முக்கிய தீர்ப்பு!
இந்த நிலையில்தான் தற்போது ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து திராவிடர் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் சண்முகம் கூறுகையில், செப்டம்பர் 17-ம் தேதி தந்தை பெரியாருடைய பிறந்தநாள் அன்று வழக்கமாக ஊர்வலம் செல்வோம். விழாவை சிறப்பாகக் கொண்டாடுவோம்.
ஆனால், அங்குள்ள துணை ஆய்வாளர் உள்ளிட்ட அதிகாரிகள், “நாங்கள் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி கொடுத்திருக்கிறோம். அதனால் உங்களுக்கு அனுமதி இல்லை. நீங்கள் வேண்டுமானால் மேலதிகாரியிடம் பேசுங்கள்” என்று தெரிவித்தார்கள்.
எங்களுக்கு மனவேதனையாக இருக்கிறது. ஏனென்றால், ஆண்டு முழுவதும் எந்த ஆட்சி வந்தாலும் இதற்கு எந்தத் தடையும் இருந்ததில்லை.
தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17 என்பது எங்களுடைய உணர்வோடும் உயிரோடும் இருக்கின்ற செய்தி. அதனால் நீங்கள் தடை கொடுக்கக்கூடாது; மறுப்பு தெரிவிக்கக்கூடாது. கண்டிப்பாக நாங்கள் நடத்துவோம்.
அப்படி இருந்தால், எங்களுடைய சப்தம்தான் ஊர்வலமாகக் கூடும் என்று நான் கடுமையாகப் பேசினேன். அதற்கு, “இல்லை, இல்லை. நீங்கள் மேலதிகாரியைப் பார்த்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்கள்.
அதனால், இதுவரைக்கும் அனுமதி மறுப்பு இருக்கிறது. அதை கண்டிப்பாக அனுமதிக்க வேண்டும் என்று மீண்டும் மீண்டும் நாங்கள் வற்புறுத்திக் கேட்டு வருகிறோம்.
எந்த இடத்திலிருந்து எந்த இடம் வரைக்கும் பேரணி நடத்த அனுமதி கேட்டிருந்தீர்கள்? அதில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?
அது இல்லை. அது சுமாராக ஒரு கிலோமீட்டர் தூரம்தான். அதுவும் காலையில் நடைபெறக்கூடிய பேரணி. விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் என்பது மாலை 5 மணிக்கு மேல்தான் நடைபெறுகிறது.
காலையில் நாங்கள் மணிக்கூண்டு பகுதியில் இருந்து புறப்பட்டு, நேதாஜி சாலை, பெரியார் வீதி வழியாகச் சென்று, பெரியார் அண்ணா நினைவு இல்லத்திற்குச் செல்வோம்.
அதற்கு முன்னதாக, பன்னீர்செல்வம் பூங்காவில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, அதன் பிறகு பெரியார் அண்ணா நினைவு இல்லத்திற்குச் செல்வோம். இதுதான் வழக்கமாக நடைபெற்று வருகிறது.
ஆனால், இப்போது அங்கு செல்ல முடியாது, போகக்கூடாது, அனுமதி மறுக்கிறோம் என்று கூறும்போது, எங்களுக்கு கண்டிப்பாக வேதனையிலும் வேதனையாக இருக்கிறது.
வருடா வருடம் நாம் செய்து கொண்டிருக்கக்கூடிய ஒரு விஷயம் இது. இதில் அனுமதி மறுக்க வேண்டிய காரணமே இல்லை. எதற்காக இதைச் செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் இருப்பதுதான் ஒரு காரணம் என்று கூறுகிறார்கள். அதனால், “நாங்கள் உங்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாது” என்று தெரிவிக்கிறார்கள்.
எங்களுக்கு பாதுகாப்பே வேண்டாம் என்று சொன்னாலும், “நாங்கள் இதைச் செய்ய முடியாது” என்று கூறியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட ஆயிரக்கணக்கானோர் எங்களோடு வருகிறார்கள். தந்தை பெரியார் இயக்கம் மற்றும் பெரியாரைப் பின்பற்றுகின்ற பல்வேறு அமைப்புகள் எங்களோடு வருவதற்குத் தயாராக இருக்கின்றன.
புரட்சிகர முன்னணியினரும் வருகிறார்கள். திராவிட விடுதலைக் கழகத்தினரும் வருவதாகத் தெரிவித்திருக்கிறார்கள். இன்று காலையில் கூட அவர்களைச் சந்தித்தபோது, “நாங்கள் உங்களுக்குப் பின்னால் வருகிறோம்” என்று தெரிவித்தார்கள்.
இந்த மாதிரி அனைத்து அமைப்புகளுமே, ஒட்டுமொத்த திராவிட இயக்கங்களும், பெரியாரிஸ்ட்டுகளும் அனைவரும் எங்களுக்குப் பின்னால் வருவதற்கும், ஊர்வலத்தில் கலந்துகொள்வதற்கும் தயாராக இருக்கிறார்கள்.
இதையும் படிங்க: அமைச்சர் வன்னியரசு பேசுனதை தப்பா புரிஞ்சுக்கிட்டாங்க! இதுபோன்ற பிழைகள் இனி நடக்கக்கூடாது! திருமாவளவன் பேச்சு!