புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவு சார்பில் மாநில மாநாடு இன்று மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியின் பிற்படுத்தப்பட்டோர் பிரிவின் தேசிய செயலாளர் ஜிதேந்திரா பேக்வால் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில், மாநில காங்கிரஸ் தலைவர் வைத்தியலிங்கம் எம்.பி மற்றும் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர். இந்த மேடையில் பேசிய நாராயணசாமி, தற்போதைய என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசை விளாசினார்.
மாநாட்டில் உரையாற்றிய நாராயணசாமி, முதலமைச்சர் ரங்கசாமி தனது தொகுதியில் உள்ள மேல் ஜாதி மக்களுக்கு வங்கிகளில் உயரிய வேலைகளையும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்குத் தூய்மைப் பணியாளர் மற்றும் பியூன் வேலைகளையும் வழங்குவதாகக் குற்றம் சாட்டினார். "கடந்த காலங்களில் ரங்கசாமி காங்கிரஸ் கட்சியில் முதலமைச்சராக இருந்தபோது, கட்சி அதிக அளவில் நிதியை ஒதுக்கிக் கொடுத்ததால் தான் புதுச்சேரியில் வளர்ச்சியைத் தர முடிந்தது; ஆனால் அவர் காங்கிரஸை விட்டு வெளியேறி பாஜகவுடன் கூட்டணி வைத்த பிறகு மாநிலத்தையே பாழாக்கிவிட்டார்" என அவர் சாடினார்.
மேலும், "எளிமையானவர்" என்று தன்னைத் தானே கூறிக்கொள்ளும் ரங்கசாமி, தற்போது விலை உயர்ந்த சொகுசு கார்களில் வலம் வருவதாகவும் நாராயணசாமி விமர்சித்தார். "கடந்த காங்கிரஸ் ஆட்சியின் போது புதுச்சேரிக்கு ஐடி (IT) நிறுவனங்களைக் கொண்டு வர முயற்சி எடுத்தோம்; ஆனால் அப்போது ஆளுநராக இருந்த கிரண்பேடியுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு அந்தத் திட்டங்களைத் தடுத்து நிறுத்தியவர் தான் இந்த ரங்கசாமி" என அவர் பகிரங்கமாகத் தெரிவித்தார். புதுச்சேரி மாநிலம் மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்ப வேண்டுமென்றால் ஆட்சி மாற்றம் அவசியம் என்றும், காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி வந்தால் மட்டுமே புதுச்சேரிக்கு விடிவுகாலம் பிறக்கும் என்றும் அவர் தனது உரையில் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: திமுக ஊழல் கட்சி இல்லையென சவால் விட முடியுமா? முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழிசை கேள்வி!
இதையும் படிங்க: "அரசியல் ஆதாயம் தேடாதீங்க!" நேரத்தை வீணடிக்க விரும்பல! பாஜக தலைவரின் புகாருக்கு செந்தில் பாலாஜி பதிலடி!