கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தர்ராஜன், தமிழக அரசியல் நிலவரம் மற்றும் கூட்டணி மாற்றங்கள் குறித்துப் பல்வேறு அதிரடி கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். பாட்டாளி மக்கள் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்திருப்பது தங்களுக்குப் பெரும் பலத்தைச் சேர்த்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அதே சமயம் திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான பிணைப்பு தளர்ந்து வருவதாகச் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், திமுக அரசை வீழ்த்துவதை நோக்கமாகக் கொண்டு எதிர்க்கட்சிகளுடன் கைகோர்க்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
“தேசிய ஜனநாயக கூட்டணி வலுப்பெற்று வருவது முதலமைச்சர் ஸ்டாலினைப் பதற்றமடைய வைத்துள்ளது; அதன் வெளிப்பாடாகவே மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து அவர் அவதூறுகளைப் பேசி வருகிறார்” எனத் தமிழிசை குற்றம் சாட்டினார். திமுகவை ஊழல் கட்சி என அமித்ஷா விமர்சித்ததற்குப் பதிலளித்த அவர், “செந்தில் பாலாஜி, பொன்முடி, கே.என்.நேரு ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை என முதலமைச்சரால் சவால் விட முடியுமா?” எனக் கேள்வி எழுப்பினார். மேலும், திருப்பூரில் மக்கள் வழிபட்டு வந்த முருகன் கோவிலை இடிக்க எதிர்ப்புத் தெரிவித்த இந்து முன்னணித் தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியன் கைது செய்யப்பட்டதற்குக் கடும் கண்டனம் தெரிவித்த அவர், வழிபாட்டுத் தலங்களை இடிக்க அரசுக்கு எந்தத் தார்மீக உரிமையும் இல்லை எனச் சாடினார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த நிர்வாகிகளான மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்றோர் மாறுபட்ட கருத்துகளைக் கூறி வருவதைச் சுட்டிக்காட்டிய தமிழிசை, காங்கிரஸ் கட்சி திமுகவுடன் இருப்பதா அல்லது த.வெ.க-விற்குச் செல்வதா என்ற குழப்பத்தில் இருப்பதாகத் தெரிவித்தார். திமுக தனது கூட்டணியை முதலில் பரிசோதித்துப் பார்க்க வேண்டும் என்றும் அவர் எகத்தாளமாகக் குறிப்பிட்டார். திருப்பரங்குன்றம் தீர்ப்பு குறித்து அமைச்சர் ரகுபதியின் விமர்சனங்கள் கண்டனத்திற்குரியவை என்று கூறிய அவர், நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிராகச் செயல்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மன்னிப்பு கேட்க வேண்டும் எனத் தனது பேட்டியில் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: “திமுக கொடுத்தது பொய் வாக்குறுதி.. மோடி கொடுத்தது 11 லட்சம் கோடி!” புள்ளிவிவரங்களுடன் திமுக-வை விளாசிய அமித்ஷா!
இதையும் படிங்க: திமுக வீட்டுக்கு போவது உறுதி! தேர்தல் அறிக்கை குழு அல்ல, அது பொய் சொல்லும் குழு - மத்திய அமைச்சர் எல். முருகன் விமர்சனம்!