திமுகவினர் சொல்வதை கேட்டால் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது அதற்கான தண்டனையை போலீஸார் அனுபவிப்பார்கள் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே. ராஜூ கூறியுள்ளார். மதுரை விளாங்குடியில் செல்லூர் ராஜூ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மதுரை விளாங்குடி பகுதியில் ஏற்கெனவே காவல் துறையிடம் அனுமதி கோரி விண்ணப்பித்துதான் பொதுமக்களுக்கான நீர்-மோர் பந்தலை திறந்து வைத்தோம். ஆனால், திறந்து வைத்த 2 நாட்களில் கூடல்புதூர் காவல் துறையினர் நீர்-மோர் பந்தலை அகற்றி விட்டனர்.

கஞ்சா மற்றும் போதைப் பொருட்களை எளிதாக விற்கலாம். ஆனால்., மக்களுக்கு நீர்-மோர் கொடுக்கக் கூடாது. இதுதான் காவல் துறையினர் எடுக்கும் நடவடிக்கையா?நீர்மோர் பந்தல் அகற்றப்பட்டது குறித்து மாநகராட்சி ஆணையரிடம் கேள்வி எழுப்பபட்டது. அதற்கு நீர்மோர் பந்தல் திறப்பதற்கு நாங்கள் தடை விதித்ததில்லை என்கிறார். காவல் துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் திமுகவினர் மிரட்டலுக்கு பயந்து நீர்மோர் பந்தலை அகற்றியுள்ளனர்.
இதையும் படிங்க: சகாயம் ஐ.ஏ.எஸ்.க்கு மத்திய போலீஸ் பாதுகாப்புக்கு உத்தரவிடப்படும்.. மதுரை நீதிமன்றம் எச்சரிக்கை.!!
விளாங்குடி பகுதியில் ஆளும்கட்சியினர் காவல் துறையினரைக் கொண்டு அதிமுகவினரையும், அதிகாரிகளையும் மிரட்டி மக்களுக்கு நல்லது செய்ய விடாமல் தடுக்கிற நடவடிக்கைக்கு மோர் பந்தல் அகற்றப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம். காவல் துறையின் நடவடிக்கைக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. அந்த வழக்கில் நீதிமன்றத்தில் வெற்றி பெற்று மீண்டும் நீர் மோர் பந்தலை திறந்து உள்ளோம்.

கூடல் புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மாநகராட்சி அனுமதி பெற்று தான் திமுகவினர் நீர் மோர் பந்தல் திறந்து உள்ளார்களா? மக்கள் வரி பணத்தில் ஊதியம் பெறும் போலீஸார், மக்களுக்காகப் பணிபுரிய வேண்டும். திமுகவினர் சொல்வதை கேட்டால் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது நீங்கள் அதற்கான தண்டனையை அனுபவிப்பீர்கள்” என்று செல்லூர் ராஜூ கூறினார்.
இதையும் படிங்க: ஒர்க் ஃப்ரம் ஃபீல்ட்.. கொடைக்கானலிலும் ரோடு ஷோ.. தெறிக்கவிடும் விஜய்.!!