தமிழக நிதி அமைச்சர் மரியவில்சன் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். விவசாயக் கடன் தள்ளுபடி ரிசர்வ் வங்கியின் அறிவுறுத்தலின்படியே செய்யப்பட்டதாக அவர் தெளிவுபடுத்தினார்.
நிதி அமைச்சர் அளித்த பேட்டியில், “திமுக ஆட்சியில் நிதி மேலாண்மை குறித்த வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இரு வாரங்களில் அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளோம். இந்த அறிக்கையில் பல முக்கிய விஷயங்கள் இடம்பெறும்” என்றார்.
மேலும், அனைத்துத் துறைகளிலும் ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்று வருவதாகவும், தணிக்கை அறிக்கைகள் பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். குறிப்பாக மதுரை மாநகராட்சியில் நடைபெற்றதாகக் கூறப்படும் ஊழல் தொடர்பான ஆதாரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் அவை வெளியிடப்படும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: பொதுச்செயலாளர் பதவி வேண்டாம்! துரைமுருகன் திடீர் ட்விஸ்ட்! திமுகவில் அடுத்த பூகம்பம்!!

தேர்தல் பிரசாரத்தின்போது பொதுமக்களிடம் இருந்து பல புகார்கள் வந்ததாக அவர் தெரிவித்தார். “திமுக ஆட்சியில் ரூ.1000 உரிமைத் தொகை வட மாநிலத்தவருக்கும் வழங்கப்பட்டதாக எங்களிடம் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக அறிக்கை கேட்டுள்ளோம். விரைவில் பதில் வரும்” என்றார்.
விவசாயக் கடன் தள்ளுபடி விவகாரத்தில், 2021-ல் அதிமுக ஆட்சி அறிவித்ததை திமுக ஆட்சி பல தவணைகளாக செயல்படுத்தியதாகவும், இப்போது ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளின்படி 45 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதாகவும் மரியவில்சன் விளக்கினார்.
திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையில் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான முழு விவரங்களும் இடம்பெறும் என்றார். மேலும், “இது ஜனநாயக நாடு. யார் வேண்டுமானாலும் எந்தக் கட்சியிலும் இணையலாம். அதிமுகவினர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவதை வரவேற்கிறோம்” என்று கூறினார்.
நிதி அமைச்சரின் இந்த அறிவிப்புகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. வெள்ளை அறிக்கை மூலம் திமுக ஆட்சியின் நிதி நிர்வாகத்தில் இருந்த குறைபாடுகள் வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகை, விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பிரச்சினைகளில் தெளிவு கிடைக்கும் என மக்கள் மத்தியில் நம்பிக்கை எழுந்துள்ளது.
இதையும் படிங்க: ஸ்டூடண்ட் எலெக்சன் இனி நடத்தலாம்! மாணவர்கள் மூலம் கல்லூரி, பல்கலையில் நுழைய தவெக திட்டம்!!