தமிழக காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் திருச்சி வேலுசாமி, 'எக்ஸ்' (முன்பு ட்விட்டர்) சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு தி.மு.க. தரப்பில் பெரும் அதிர்ச்சியையும் எரிச்சலையும் ஏற்படுத்தியுள்ளது.
நேற்று அவர் வெளியிட்ட பதிவில், “காங்கிரஸ்காரனுக்கு காந்தியும், காமராஜரும் தான் மாபெரும் தலைவர்கள்; புறம்போக்குகள் எல்லாம் தலைவர்கள் இல்லை. 'கருணாநிதி தான் மாபெரும் தலைவர்' என்பவர்களுக்கு, காங்கிரஸ் கட்சி என்ன சின்ன வீடா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்தப் பதிவு தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, “தமிழகத்தில் நடக்கும் தி.மு.க. ஆட்சி என்பது காமராஜர் ஆட்சி தான்” என்று பாராட்டியிருந்த நிலையில், திருச்சி வேலுசாமியின் இந்தக் கருத்து மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டின் கடன் நிலை கவலைக்கிடம்!! திமுகவை வம்பிழுக்கு காங்., நிர்வாகி! பிரவீன் சக்ரவர்த்தி!
காங்கிரஸ்காரனுக்கு காந்தியும், காமராஜரும்தான் மாபெரும் தலைவர்கள்.
புறம்போக்குகளெல்லாம் இல்லை.
கருணாநிதிதான் மாபெரும்தலைவர், என்பவர்களுக்கு காங்கிரஸ் கட்சி சின்னவீடா?
— TRICHY VELUSAMY (@TrichyVelusamy) January 13, 2026
இதற்கு முன்பும் காங்கிரஸ் தரப்பில் தி.மு.க.வுக்கு எதிரான கருத்துகள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருந்தன. கடந்த சட்டசபைத் தேர்தலில் கூட்டணி பலத்தால் தி.மு.க. பெற்ற வெற்றிகளை சுட்டிக்காட்டி, ஆட்சியில் பங்கு கேட்கும் வகையில் எம்.பி. மாணிக்கம் தாகூர் தொடர்ந்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார். அதற்கு தி.மு.க. நிர்வாகிகள் பதிலடி கொடுத்தாலும், மாணிக்கம் தாகூரின் கேள்விகளுக்கு திருப்திகரமான பதில் இல்லை என்ற நிலை தொடர்கிறது.
இதேபோல் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர், ராகுல் காந்தியின் நண்பரும் தரவு பகுப்பாய்வு பிரிவு நிர்வாகியுமான பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் விஜயை சந்தித்ததும், ஆட்சியில் பங்கு கோருவதற்கு ஆதரவாக இருப்பதும் தி.மு.க.வுக்கு அச்சுறுத்தலாக பார்க்கப்படுகிறது.
தமிழக சட்டசபை காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார் உள்ளிட்டோர் ஆட்சியில் பங்கு கேட்டு பகிரங்கமாக பேசி வருகின்றனர். கடந்த தேர்தலை விட அதிக தொகுதிகள் வேண்டும் என்று வலியுறுத்தி வரும் காங்கிரஸ் தலைவர்கள், அதை தராவிட்டால் த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்கலாம் என்று மேலிடத்திடம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த ஒட்டுமொத்த சூழலில் திருச்சி வேலுசாமியின் சமீபத்திய பதிவு தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் புதிய பிளவை ஏற்படுத்தும் என்ற அச்சத்தை அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க: ஆட்சி தான் டார்கெட்! அடுத்தடுத்து மாநாடு போடும் திமுக!! செலவை சமாளிக்க முடியாமல் திணறும் மா.செயலாளர்கள்!