முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் இளையராஜாவிடம், அரும்பாக்கத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு, கருத்துக்கணிப்பு நிறுவனம் நடத்தி வருபவர், சட்டமன்ற வாக்கெடுப்பில் தமிழக வெற்றி கழகத்தின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டுக்கு எதிராக தாங்கள் கூறியபடி வாக்களிக்குமாறு வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
அதற்காக ரூ.35 கோடி லஞ்சம் வழங்க முன்வந்ததுடன், அதை ஏற்க மறுத்ததால் இளையராஜாவுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகார் அளிக்கப்பட்டது.
அந்தப் புகாரின் அடிப்படையில், திருவல்லிக்கேணி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கில் இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர். இதன்மூலம் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: விஸ்வரூபம் எடுக்கும் குதிரை பேரம்... ஹோட்டலில் வைத்து ரூ.80 கோடிக்கு பேரம்... தோண்ட தோண்ட வெளியாகும் திடுக் தகவல்கள்...!
இந்த நிலையில், தற்போது மேலும் 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களிடமிருந்து ரூ.50 லட்சத்திற்கும் அதிகமான தொகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கு முன்பு, போலீசார் சூளைமேடு பகுதியில் செயல்பட்டு வந்த தீபம் பைனான்ஸ் நிறுவனத்தில் விசாரணை நடத்தி, அந்த நிறுவனத்தை நடத்தி வந்த கருணாநிதி மற்றும் சரவணன் ஆகியோரிடமும் விசாரணை மேற்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், மேலும் சிலர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபடுகிறார் முதல்வர் விஜய்..!! விளாசிய ஆர்.எஸ்.பாரதி..!!