தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே. செல்வப்பெருந்தகை வீட்டில் வருமான வரித்துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். தேர்தல் பிரசாரத்துக்குச் செல்லவிடாமல் தடுத்து வைத்திருப்பதாக செல்வப்பெருந்தகை குற்றம் சாட்டியுள்ளார்.
“இந்தி பேசும் வருமான வரித்துறை அதிகாரிகள் என்னை சிறைப்பிடித்து வைத்துள்ளனர். எனது அரசியல் கடமைகளைச் செய்யவிடாமல், சோதனை என்ற பெயரில் முடக்கி வைத்துள்ளனர்” என அவர் தெரிவித்தார். ராகுல் காந்தி இன்று தமிழகத்தில் பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியிலேயே தன்னை முடக்கி வைக்கும் வகையில் இந்த சோதனை நடைபெறுவதாக அவர் கூறினார்.
ராகுல் காந்தி கன்னியாகுமரியில் பிரசாரம் செய்ய வரும் நிலையில், செல்வப்பெருந்தகை அங்கு செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால் வருமான வரித்துறையினர் அவரை ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்குள் இருக்குமாறு தடுத்து வைத்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதேபோல் முன்னாள் அமைச்சர் மு.க. அழகிரி வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ராகுல் தமிழகம் வரும் போது இப்படியா?... சிறைபிடிக்கப்பட்ட செல்வப்பெருந்தகை... காங்கிரஸ் தலைவருக்கு ‘சோதனை’...!

இந்த நடவடிக்கையை “ஜனநாயகத்தைத் தடுக்கும் முயற்சி” என்றும் “எதிர்க்கட்சியின் குரலை ஒடுக்கும் அரசியல் சதி” என்றும் செல்வப்பெருந்தகை விமர்சித்தார். தேர்தல் பிரசாரம் முடிவடைய இன்னும் 48 மணி நேரம் கூட இல்லாத நிலையில், இத்தகைய நடவடிக்கை எதிர்க்கட்சிகளை முடக்கும் தோல்வி பயத்தின் வெளிப்பாடு என அவர் சுட்டிக்காட்டினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் இதுகுறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். “தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சகோதரர் செல்வப்பெருந்தகை அவர்களது பரப்புரையை முடக்க நினைக்கும் சதிக்குக் கடும் கண்டனம்!
இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதை மறந்து, எதிர்க்கட்சியினரை முடக்க, தோல்வி பயத்தில் மத்திய பா.ஜ.க. அரசு செய்துகொண்டிருக்கும் அட்டூழியத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்” என ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், இந்த சோதனை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் இதை மத்திய அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை எனக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ராகுல் காந்தியும் வரல!! தேர்தல் காசும் வரல!! திமுக - காங் நிர்வாகிகள் அப்செட்!