தமிழகத்தில் மூன்று முறை முதல்வராக இருந்தவர் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதாவின் விசுவாசி. தர்மயுத்தம் தொடங்கி அதிமுகவை ஆட்டிப்படைத்த ஓபிஎஸ், மீண்டும் எடப்பாடி பழனிசாமியுடன் இணக்கமானார். அதன் பின்னர் பாஜகவிலும் அவருக்கு மவுசு கூடியது. அப்போது தமிழக முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமியைக் காட்டிலும், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை எப்போது வேண்டுமானாலும் சந்திக்கக்கூடிய அளவிற்கு துணை முதலமைச்சராக இருந்த ஓபிஎஸுக்கு அதிகாரம் இருந்தது.
வருக்கு டெல்லி மேலிடத்தில் இருந்த நெருக்கம் இபிஎஸ் தரப்பை எரிச்சலடைய வைக்கும் அளவுக்கு வளர்ந்தது. இதனால் சரியான நேரம் பார்த்து “ஒரு உறைக்குள் ரெண்டு கத்தி இருக்கக்கூடாது” என ஓபிஎஸை அதிமுகவில் இருந்து கழட்டிவிட்டார். ஆனால் அதன் பின்னரும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த ஓபிஎஸ், கடந்த மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டார். அதில் அவர் தோல்வியைத் தழுவி இருந்தாலும், 40 சதவீத வாக்குகளைப் பெற்று 2வது இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தனக்கு அரசியலில் இருக்கும் செல்வாக்கு மங்கிவிடவில்லை என்று உணர்த்தினார்.
இது எல்லாம் அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் இணையாத வரைக்கும் தான். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்தபோதே தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்த ஓபிஎஸின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியானது. எடப்பாடி பழனிசாமியின் நெருக்கடியை அடுத்து பாஜக தலைமையும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு பாராமுகம் காட்ட ஆரம்பித்தது.
இதையும் படிங்க: மீண்டும் ஓபிஎஸை கூட்டணிக்குள் இணைக்க திட்டமா? - சற்றும் யோசிக்காமல் நயினார் நாகேந்திரன் கொடுத்த பதில்...!
இறுதியாக பிரதமரை சந்திக்க நேரம் கேட்டும் அவர் அதனை பொருட்படுத்தாததால் அதிருப்தி அடைந்த ஓ.பன்னீர்செல்வம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளார். இதனால் பாஜக - அதிமுக கூட்டணிக்கு எந்த பிரச்சனையும் கிடையாது என நினைப்பவர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில், வர உள்ள சட்டமன்ற தேர்தலில் ஒன்றல்ல, ரெண்டல்ல கிட்டத்தட்ட 86 தொகுதிகளில் அதிமுக - பாஜக கூட்டணிக்கு சிக்கல் ஏற்படக்கூடும் என அரசியல் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
அதிமுகவிலிருந்து ஓ. பன்னீர்செல்வம் வெளியேற்றப்பட்ட போது அவருடன் பெரும் எண்ணிக்கையிலான நிர்வாகிகள் வரவில்லை என்றாலும், தென் மாவட்டங்களின் சில பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு அவருக்கு செல்வாக்கு இருக்கிறது. ஓ. பன்னீர்செல்வத்தைப் பொறுத்தவரை, அவருக்கு அநீதி இழைக்கப்பட்டதாக கருத்து இருக்கிறது. அது சமுதாயங்களைக் கடந்தது. அவருடைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களும் மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறார்கள். இதனால், தென் மாவட்டங்களிலும் டெல்டா மாவட்டங்களிலும் குறிப்பிடத்தக்க அளவில் பாதிப்பு இருக்கும். ஒருவேளை ஓ.பன்னீர்செல்வம் திமுக அல்லது தவெகவுடன் இணைந்து தேர்தலை சந்தித்தால் அது நிச்சயம் அதிமுக - பாஜக கூட்டணியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கின்றனர் அரசியல் விமர்சகர்கள் .
இதையும் படிங்க: திமுகவுடன் கூட்டணியா? - மெளனம் கலைத்த ஓபிஎஸ்... வெளியானது அதிகாரப்பூர்வ தகவல்...!