தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழல் மிகவும் சிக்கலாகியுள்ள நிலையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்துப் பேசினார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பிற்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் அதிரடியான கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தங்களின் ஆதரவைக் கோரியது குறித்துக் காதர் மொய்தீன் விளக்கியதாவது: "நாங்கள் மதச்சார்பற்ற கூட்டணிதான் வைப்போம், எங்களுக்கு ஆதரவு தாருங்கள்" என்று தவெக தரப்பிலிருந்து எங்களிடம் கேட்டார்கள்.
அதற்கு நாங்கள், "எங்களது கூட்டணித் தலைவர் திமுக. அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்களோ அதற்கு நாங்கள் கட்டுப்படுவோம். நீங்கள் வேண்டுமானால் திமுக தலைமையிடமே இது குறித்துக் கேளுங்கள்" என்று கூறினோம்.
இதையும் படிங்க: விஜய் போனில் அழைத்து ஆதரவு கேட்டார் - விசிக தலைவர் திருமாவளவன் பரபரப்பு பேட்டி!
தவெக-வின் இந்தத் தூது குறித்து நாங்கள் திமுக தலைமையிடம் ஆலோசித்துள்ளோம். ஆனால், அவர்கள் இப்போது எதுவும் கூறவில்லை. எதுவாக இருந்தாலும் திமுக தலைமையின் முடிவே எங்களது முடிவாகும். புதிய ஆட்சி அமைப்பதில் ஆளுநர் காட்டி வரும் தாமதம் குறித்து அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக-வை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும்.
ஆளுநர் தனது சுயமாகச் செயல்படுகிறாரா அல்லது பாஜக சொல்லிக் கேட்கிறாரா என்று தெரியவில்லை. 118 எம்.எல்.ஏ-க்கள் இருந்தால் தான் அழைப்பேன் என்று கூறுவது ஒரு சிக்கலான நேரத்தை உருவாக்கியுள்ளது.
ஒருவேளை திமுக அதிமுக-விற்கு ஆதரவளித்தால் உங்களது நிலைப்பாடு என்ன? என்று கேட்டதற்கு, காதர் மொய்தீன் மிகவும் நுணுக்கமான பதிலைக் கொடுத்தார். அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம்" என்று அவர் குறிப்பிட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ஏற்கனவே திமுக "ஆட்சியில் இடையூறு செய்ய மாட்டோம்" என்று கூறியுள்ள நிலையில், ஐயூஎம்எல் தலைவரின் இந்தப் பதில் தமிழக அரசியலில் ஒரு பெரிய 'ட்விஸ்ட்' வர வாய்ப்புள்ளதைக் காட்டுகிறது.
கூட்டணி ஆட்சி என்ற நிலைக்கு இப்போது இடமில்லை என்று குறிப்பிட்ட அவர், ஒட்டுமொத்தப் பொறுப்பையும் திமுக தலைமையிடமே விட்டுள்ளதால், மு.க.ஸ்டாலினின் அடுத்தகட்ட நகர்வே விஜய்யின் முதல்வர் கனவை நனவாக்குமா என்பதைத் தீர்மானிக்கும்.
இதையும் படிங்க: காங்கிரசுக்கு பாஜக கடும் கண்டனம்.. தவெக-விற்கு ஆதரவு தெரிவித்ததால் தமிழக அரசியலில் பரபரப்பு!