தமிழக முதல்வர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் இன்று தமிழ்நாட்டில் 1,000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் காலை 9 மணிக்கு வெளியாகவுள்ளது.இந்திய அளவில் 3,000க்கும் மேற்பட்ட ஸ்கிரீன்களிலும், உலகம் முழுவதும் 8,000 ஸ்கிரீன்களில் வெளியிடப்படுகிறது. ஆந்திரா, தெலங்கானாவில் காலை 8 மணிக்கு ரிலீஸ் ஆக உள்ள நிலையில், கேரளம், கர்நாடகாவில் காலை 6 மணிக்கே திரைப்படம் ரி்லீஸ் செய்யப்பட்டது.
கேரள–தமிழக எல்லைப் பகுதியான இடுக்கி மாவட்டம் குமுளியில் உள்ள திரையரங்கில் இன்று காலை 6 மணிக்கு திரையிடப்பட்டது. இந்த முதல் காட்சியைக் காண தமிழகம் மட்டுமின்றி, கேரளத்தைச் சேர்ந்த ரசிகர்களும் திரளாக வந்து உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
கடந்த பொங்கலுக்கு வெளியாக திட்டமிடப்பட்டிருந்த 'ஜனநாயகன்' திரைப்படம், சென்சார் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் நீதிமன்ற நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெளியீடு தள்ளிப்போனது. அந்த அனைத்து தடைகளையும் தாண்டி, தற்போது இந்த திரைப்படம் இன்று நாடு முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: களைக்கட்டிய ‘ஜனநாயகன்’ ரிலீஸ்... வான வேடிக்கை, டிஜே உடன் இரவு முழுக்க தளபதி ஃபேன்ஸ் கொண்டாட்டம்...!
இந்த திரைப்படம் மீது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அதன் வெளியீட்டை உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் இன்று காலை 9 மணிக்குத்தான் திரைப்படம் திரையிடப்பட உள்ள நிலையில், கேரள–தமிழக எல்லைப் பகுதியான இடுக்கி மாவட்டம் குமுளியில் இன்று காலை 6 மணிக்கே முதல் காட்சி திரையிடப்பட்டது.
இதில் கேரள ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழகத்தின் எல்லைப் பகுதிகளான மதுரை, தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான ரசிகர்கள் வந்து திரைப்படத்தைப் பார்த்து உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், திரையரங்கு முன்பு சுமார் 80 அடி உயர கட்-அவுட் அமைக்கப்பட்டு, அதற்கு பாலாபிஷேகம் செய்தும், பட்டாசுகள் வெடித்தும், முழக்கங்களை எழுப்பியும் ரசிகர்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி இன்று காலை 6 மணிக்கு திரையிடப்பட்டது.
முதல் காட்சியைப் பார்ப்பதற்காக விஜய் ரசிகர்கள், தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் மற்றும் பெண் ரசிகர்கள் என ஏராளமானோர் அதிகாலை 4 மணி முதலே திரையரங்குகள் முன்பு குவிந்தனர். திரைப்படத்தின் வெளியீட்டை முன்னிட்டு, விஜயின் கட்-அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்தும், சூடம் ஏற்றியும், பட்டாசுகள் வெடித்தும் உற்சாகமாகக் கொண்டாடினர்.
பெங்களூரு மட்டுமின்றி, பல்வேறு பகுதிகளிலிருந்தும் ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சியைக் காணும் நோக்கில் வந்து, திரையரங்குகள் முன்பு கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: "ONE LAST TIME"..! தளபதியின் கடைசி தரிசனம்... கலக்கலாக ரெடியாகும் தியேட்டர்கள்..!!