திருச்சியில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அமலாக்கத்துறையினர் எங்களுக்கு சொந்தமான இடத்தில் நடத்திய சோதனை பொழுது சில ஆவணங்கள் கிடைத்ததாகவும் அது குறித்து ஆய்வு செய்யுமாறு 
 தமிழக போலீசாருக்கு தெரிவித்தனர். அதன் அடிப்படையில் தமிழக போலீசார் அந்த ஆவணங்களை ஆய்வு செய்வார்கள். முறைகேடு நடந்ததா? என்பதை போலீசார் விசாரிப்பார்கள். ஆனால் நான் எந்தவித தவறும் செய்யவில்லை.
திமுகவை மிரட்டி பார்ப்பதற்காக கூட இதுபோன்று அவர்கள் செய்யலாம். தேர்தல் நேரத்தில் எங்களை விமர்சிக்க எதிர்க்கட்சிகளுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. விசாரணையில் நாங்கள் குற்றம் அற்றவர்கள் என்பதை நிரூபிப்போம் எனத் தெரிவித்துள்ளார். 
அமலாக்கத்துறை Vs கே.என்.நேரு விளக்கம்: 
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் 2,500க்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்துள்ளதாக அமலாக்கத்துறை குற்றச்சாட்டியது. தமிழகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் லஞ்சம் பெற்றுக்கொண்டு பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக காவல் துறைக்கு அமலாக்கத் துறை கடிதம் எழுதியுள்ளது. அதில், சோதனைகளின்போது கிடைத்த ஆவணங்களின் படி, 2024ஆம் ஆண்டு 2,538 பணியிடங்களுக்கான நியமனத்தில், முறைகேடு நடந்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு பதவிக்கும் 25 முதல் 35 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டிருக்கலாம் என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: தமிழக அரசியலில் பரபரப்பு... மறுத்த கே.என்.நேரு.. புட்டு புட்டு ஆதாரங்களை வெளியிட்ட அமலாக்கத்துறை...!
இதற்கு குடிநீர் வழங்கல் மற்றும் நகராட்சி நிர்வாகத்தினுடைய அமைச்சர் கே. என். நேரு இதற்கு மறுப்பு தெரிவித்திருந்தார். நியாயமான முறையில் தான் தேர்வுகள் நடைபெற்றதாக விளக்கம் அளித்திருந்தார். இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்த நிலையில், டிஜிபிக்கு அனுப்பிய அந்த கடிதத்தோடு 232 பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் அனுப்பப்பட்டதாகவும் அமலாக்கத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 
மேலும் இதுகுறித்து அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில், அமைச்சர் கே.ன்.நேரு, அவருடைய சகோதரர்கள் மணிவண்ணன், ரவிச்சந்திரன், டிவிஎச் உடைய பொது மேலாளர் ரமேஷ், உதவியாளர்களான செல்வமணி, கவி பிரசாத் ஆகியோருடைய பெயர்கள் இடம் பெற்றிருந்தன. 2025 ஏப்ரல் மாதம் சென்னை, திருச்சி, கோவையில் சோதனைகள் நடத்தியபோது, ஆவணங்கள், டிஜிட்டல் கருவிகள், போட்டோக்கள், வாட்ஸ்அப் உரையாடல்கள் கைப்பற்றப்பட்டன. அதுமட்டுமின்றி, இவற்றை ஆய்வு செய்தபோது, பணி நியமன ஊழல் தொடர்பான ஆதாரங்கள் சிக்கியதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது. 
இந்த விவகாரம் அடுத்தடுத்து விஸ்வரூபம் எடுத்து வரும் நிலையில், திமுக மற்றும் அமைச்சர் கே.என்.நேரு அமலாக்கத்துறை குற்றச்சாட்டை தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது. 
இதையும் படிங்க: அப்படி ஒன்னும் இல்ல... அரசுக்கு களங்கம் கற்பிக்கும் முயற்சி... அமைச்சர் கே.என்.நேரு பதிலடி...!