இரண்டு நாட்கள் பயணமாக சென்னை வந்துள்ள பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா, சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக நிர்வாகிகளிடம் ஆலோசனை கூட்டத்தை ஆரம்பித்துள்ளார்.
பாஜக தேசியத் தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா, இரண்டு நாட்கள் பயணமாக சென்னை வந்துள்ளார். அவரை பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மாநில முன்னாள் தலைவர்கள் தமிழிசை சௌந்தரராஜன், பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் பாஜக மகளிரணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் ஆகியோர் வரவேற்றனர். இந்நிலையில் இந்த மையக்கூட்டம் பரபரப்பாக பார்க்கப்படுகிறது.
பாஜகவின் இந்துத்துவா கொள்கைகள் தமிழ்நாட்டில் திராவிட இயக்கங்களின் மதச்சார்பின்மை மற்றும் தமிழ் பண்பாட்டு அடையாளத்துடன் முரண்படுகின்றன. உதாரணமாக, மும்மொழிக் கொள்கை மற்றும் நீட் தேர்வு ஆகியவை தமிழ்நாட்டில் எதிர்ப்பை சந்தித்தன. இதில் அதிமுகவும் பாஜகவுக்கு எதிராக நிலைப்பாடு கொண்டுள்ளது.

இதையும் படிங்க: அதிமுக - பாஜக கூட்டணி 200 தொகுதிகளில் ஜெயிக்கும்.. அடித்துச் சொல்லும் அர்ஜூன் சம்பத்.!!
அதிமுக, மாநில உரிமைகளை வலியுறுத்தும் திராவிட கட்சியாக, மத்திய அரசின் சில கொள்கைகளை எதிர்க்கிறது. இது பாஜகவுடன் மோதலுக்கு வழிவகுத்தது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அதிமுகவின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அண்ணாதுரை ஆகியோரை விமர்சித்தது அதிமுகவினரிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இது 2023 செப்டம்பரில் கூட்டணி முறிவுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
அண்ணாமலை, அதிமுகவை விட பாஜகவை முதன்மை எதிர்க்கட்சியாக காட்ட முயன்றதாகவும், அதிமுகவின் உள் விவகாரங்களில் தலையிட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 2019 மற்றும் 2021 தேர்தல்களில் பாஜக-அதிமுக கூட்டணி பெரும் தோல்வியடைந்தது. 2019 நாடாளுமன்றத் தேதலில் 1 தொகுதி மட்டுமே வெற்றி. 2021ல் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 75 இடங்கள் வெற்றி பெற்று தோல்வி. இது கூட்டணியின் பலவீனத்தை வெளிப்படுத்தியது.

பாஜகவுடன் கூட்டணி வைப்பது மதச்சிறுபான்மையினர், திராவிட ஆதரவாளர்களின் வாக்குகளை இழக்கச் செய்யும் என்று அதிமுக அஞ்சுகிறது. செப்டம்பர் 25, 2023 அன்று, அதிமுக அதிகாரப்பூர்வமாக பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது. முக்கியமாக அண்ணாமலையின் கருத்துகள் மற்றும் பாஜகவின் "அதிமுகவை பலவீனப்படுத்தும்" முயற்சிகளைக் காரணம் காட்டி கூட்டணியை முறித்துக் கொண்டது.
2024 மக்களவை தேர்தலில் இரு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிட்டு ஒரு தொகுதியைக் கூட வெல்லவில்லை. இதனால் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு மீண்டும் கூட்டணி அமைக்கப்பட்டது. ஏப்ரல் 11, 2025 அன்று அமித் ஷா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இணைந்து இதை அறிவித்தனர்.

ஆனாலும், இந்த கூட்டணியில் அதிமுக தனித்து ஆட்சி அமைக்க விரும்புவதாகக் கூறி, கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார் எடப்பாடி பழனிச்சாமி. இது பாஜகவின் "கூட்டணி ஆட்சி" திட்டத்துக்கு வேட்டு வைத்தது. அதிமுகவின் சில தலைவர்கள் இந்த கூட்டணியால் வாக்கு இழப்பு ஏற்படலாம் என்று அஞ்சுகின்றனர். குறிப்பாக மதச்சிறுபான்மையினர் மற்றும் திராவிட ஆதரவாளர்கள் அதிமுகவின் பாஜக கூட்டணியை விரும்பவில்லை.
பாஜகவின் புதிய மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் அதிமுக அமைச்சர் என்பதால், உறவுகளை மேம்படுத்த உதவலாம் என்றாலும், இரு கட்சிகளுக்கும் இடையே கெமிஸ்ட்ரி ஒர்க்-அவுட் ஆகவில்லை என்ற கவலை நீடிக்கிறது.

பாஜக-அதிமுக கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் முக்கியமாக கொள்கை முரண்பாடுகள், தலைமை மோதல்கள், தேர்தல் முடிவுகளில் தோல்வி ஆகியவற்றால் அதிருப்தி நிலவுகிறது. 2023ல் முறிந்த கூட்டணி 2025ல் மீண்டும் உருவாகியிருந்தாலும், அதிமுகவின் தனி ஆட்சி விருப்பமும், பாஜகவின் கூட்டணி ஆட்சி திட்டமும் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. 2026 தேர்தலில் இந்த கூட்டணியின் வெற்றி, இரு கட்சிகளின் ஒருங்கிணைப்பு, தமிழ்நாட்டு வாக்காளர்களின் புரிதலில் அடங்கி உள்ளது. ஆகவே இந்த முரண்பாடுகளை களையும் வகையில் ஜெ.பி.நட்டாவின் இந்த மையக்கூட்டத்தில் ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் எனவும் தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: பொதுக்கூட்டத்தில் ஏடாகூடமாக பேசிய நிர்வாகி... அதிரடியாக ஆக்ஷன் எடுத்த அதிமுக!!