2026ம் ஆண்டு தேர்தலில் சின்ன ஓட்டு வித்தியாசம் கூட பெரிய வெற்றியை பின்னுக்குத் தள்ளிவிடும் என்பதால், இப்போதிலிருந்தே கழக உடன்பிறப்புகளை ஸ்டாலின் தயார் செய்து வருகிறார். வீடு, வீடாக சென்று திமுகவின் நலத்திட்டங்களை மக்களுக்கு எடுத்துரையுங்கள் என்றது முதல் புதிய உறுப்பினர்களை குறிப்பாக முதல் முறை வாக்களிக்கும் இளம் தலைமுறையினரை அதிக அளவில் கட்சி சேர்க்க வேண்டும் என திமுக நிர்வாகிகளுக்கு அசைன்மெண்ட் கொடுத்துள்ளார்.

அதன் ஒருபகுதியாகவெ ஜூன் 7ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். கட்சி உறுப்பினர்கள் சேர்க்கை தொடர்பாக அனைத்து மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடைபெறவுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ள கூட்டத்தில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க வேண்டுமென திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் மதுரை பொதுக்குழு அரசியல் வட்டாரத்தில் ஏற்படுத்திய தாக்கம், புதிய உறுப்பினர்கள் சேர்க்கை, 2026 சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.