தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 23ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தி.மு.க. கூட்டணியின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் சேலத்தில் வரும் 15ஆம் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்க, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தி.மு.க. தலைமை அலுவலகத்தில் இருந்து ராகுல் காந்தியின் அலுவலகத்துக்கு நேரடியாக அழைப்பு விடுக்கப்பட்டபோது சாதகமான பதில் வராததால், ராகுலுக்கு நெருக்கமான கமல்ஹாசன் மூலம் அழைப்பு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, தமிழக காங்கிரஸ் பொதுச்செயலர் வசந்தராஜ், ராகுல் காந்திக்கு எழுதிய கடிதத்தில், “பிரசாரத்தை நீங்கள் தவிர்த்தால் தமிழக மக்களிடையே நல்ல அபிப்பிராயம் ஏற்படாது” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தவெக கூட்டணி அமையாததால் தமிழகம் வர மறுக்கிறாரா ராகுல்காந்தி?! கிரிஷ் சோடங்கர் கொடுத்த ரிப்ளை!
தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர், “ராகுல் பிரசாரத்துக்கு வருவார்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஆனால் மற்றொரு மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் இது குறித்து தெளிவான பதில் அளிக்காமல் தவிர்த்துள்ளார்.

தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கூறுகையில், “பிரதமர் மோடி தமிழகத்தில் மூன்று முறை பிரசாரம் செய்துவிட்டார். ஆனால் ராகுல் மற்றும் பிரியங்கா இதுவரை ஒரு முறை கூட வரவில்லை. புதுச்சேரியில் ராகுலும் ஸ்டாலினும் ஒரே நாளில் பிரசாரம் செய்தபோதும் இருவரும் சந்திக்கவில்லை. கேரளா பிரசாரத்துக்காக சென்னை, கோவை வந்தபோதும் தமிழகத்தில் பிரசாரம் செய்யவில்லை” என்று வேதனை தெரிவித்தனர்.
கடந்த லோக்சபா தேர்தலில் ஸ்டாலினும் ராகுலும் ‘சகோதரர்கள்’ என்று ஆரத்தழுவி பிரசாரம் செய்த நிலையில், இந்தத் தேர்தலிலும் அதே உறவை ராகுல் வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. கமல்ஹாசனின் அழைப்பின் மூலம் ராகுல் 15ஆம் தேதி சேலம் கூட்டத்துக்கு வருவார் என்று காங்கிரஸ் நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இதேவேளையில், அதிமுக மற்றும் பாஜகவினர் ‘இண்டியா கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது’ என்று தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், சேலம் கூட்டம் கூட்டணியின் ஒற்றுமையை நிரூபிக்கும் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: நான் பண்ணது தப்புதான்! மனசுக்குள்ள சின்ன வருத்தம் இருக்கு!! புதுச்சேரிக்கு ராகுல்காந்தி செய்து கொடுத்த ப்ராமிஸ்!