தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், அரசு நிர்வாகத்தை அதிரடியாகச் சீரமைக்கும் நோக்கில் மூத்த ஐஏஎஸ் (IAS) மற்றும் ஐபிஎஸ் (IPS) அதிகாரிகளை இடமாற்றம் செய்து முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. தலைமைச் செயலாளர் எம். சாய் குமார் வெளியிட்டுள்ள இந்த அரசாணையின்படி, முக்கியத் துறைகளின் செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
கடந்த திமுக ஆட்சியில் முதலமைச்சரின் செயலாளராகவும், நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளராகவும் சர்வ அதிகாரம் படைத்தவராக வர்ணிக்கப்பட்ட திரு. டி. உதயச்சந்திரன், IAS, தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். நேற்று காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்த அவர், தற்போது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் (TIIC) கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அரசு இயந்திரத்தை முடுக்கிவிடும் வகையில் பல்வேறு துறைகளுக்குப் புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கைடன்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக இருந்த டாக்டர் தாரேஸ் அகமது, IAS, தற்போது சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: முப்படைகளின் தலைமை தளபதியாக தமிழர்! லெப்டினன்ட் ஜெனரல் ராஜா சுப்பிரமணி நியமனம்!
தொழில்துறையின் சிறப்புச் செயலாளராக இருந்த திருமதி மரியம் பல்லவி பல்தேவ், IAS, சமூக நலம் மற்றும் மகளிர் மேம்பாட்டுத் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.
முன்னாள் முதலமைச்சரின் செயலாளராக இருந்த திருமதி அணு ஜார்ஜ், IAS, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
TIIC தலைவராக இருந்த திரு. குமார் ஜெயந்த், IAS, தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் ஆவணங்கள் நிறுவனத்தின் (TNPL) கூடுதல் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டுமன்றி, காவல்துறை உயர் மட்டத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட உளவுத்துறை ஐ.ஜி. அவினாஷ்குமார் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, வடக்கு மண்டல ஐ.ஜி.யாகப் பணியாற்றிய அஸ்ரா கார்க், IPS, புதிய உளவுத்துறை ஐ.ஜி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அதிரடி மாற்றங்கள் அனைத்தும் உடனடியாக நடைமுறைக்கு வருவதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: வரலாற்று சாதனை! தமிழகம், மேற்கு வங்க வாக்காளர்களுக்கு தலைமை தேர்தல் ஆணையர் பாராட்டு!