கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிமங்களை அகழ்ந்தெடுக்கும் திட்டம் தொடர்பாக எழுந்துள்ள எதிர்ப்புகள் குறித்து இயற்கை வளங்கள் துறை அமைச்சர் பிரபு விளக்கம் அளித்துள்ளார். கன்னியாகுமரி மக்களின் நலனுக்கு எதிராக தமிழ்நாடு அரசு எந்த சூழலிலும் முடிவு எடுக்காது என்று அவர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிம சுரங்கத் திட்டத்தின் கால நீட்டிப்பு தொடர்பான அரசாணையை திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தொடர்ந்து அரசை வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் துறை சார்ந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்திற்குப் பிறகு அமைச்சர் பிரபு, முதலமைச்சரின் உத்தரவின் பேரில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அணுக்கனிமத் திட்டம் குறித்து கடலோர கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளுடன் அரசின் சார்பில் விரிவான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக ஆட்சியில் செயல்பாட்டுக்கு வராத புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! ஆதாரத்துடன் அமைச்சர் கீர்த்தனா தாக்கு!

மேலும், மக்களின் நலனுக்கு பாதிப்பு ஏற்படும் வகையிலோ அல்லது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் வகையிலோ எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும், உள்ளூர் மக்களுடன் கலந்தாலோசிக்காமல் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு எந்த முடிவையும் மேற்கொள்ளாது என்றும் கூட்டத்தில் தெளிவாக தெரிவிக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அமைச்சர் பிரபுவின் கருத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் வரவேற்றுள்ளார். சூப்பர்… இது மக்கள் அரசு என்று கூறினார். கன்னியாகுமரி அணுக்கனிம சுரங்க காலநீட்டிப்பு அரசாணையை மறுபரிசீலனை செய்ய மக்களின் விருப்பப்படியும் கோரிக்கையை ஏற்றும் செவிசாய்த்த முதல்வர் விஜய்க்கும் இந்த நல்ல முடிவு எடுக்க உதவிய இயற்கை வளங்கள் துறை அமைச்சருக்கும் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். மேலும், இக்கோரிக்கையை முதலமைச்சரிடம் நேரில் வலியுறுத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேஷ்குமாருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக பாராட்டுகளை கூறுவதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதல்வர் விஜய் ஆட்சியில் டிஜிட்டல் புரட்சி! ஸ்லைடு, வீடியோ தயாரிப்பாளர்களுக்கு திடீர் டிமாண்ட்!