தமிழக அரசு தாக்கல் செய்துள்ள 2026-27ஆம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், சிறு மற்றும் குறு தொழில்களுக்கு ஒதுக்கப்பட்ட மானியத் தொகை மற்றும் ஒட்டுமொத்த தொழிற்துறைக்கான நிதி ஒதுக்கீடு போதுமானதாக இல்லை மற்றும் மின் நிலைக்கட்டணம் அறிவிப்பு இல்லை என தொழில் துறை வேதனை தெரிவிக்கின்றனர்.
பட்ஜெட் குறித்து பேசிய ரயில்வே உபகரண உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் சுருளிவேல் கூறும் போது : நடப்பு நிதிநிலை அறிக்கையில் சிறு மற்றும் குறு தொழில்களுக்கான முதலீட்டு மானியமாக ரூ.358 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டிலேயே கோவையில் மட்டும் சுமார் ரூ.100 கோடி அளவிற்கு மானிய பாக்கி வழங்க வேண்டியுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள பிற மாவட்டங்களையும் கணக்கிட்டால், இந்த ரூ.358 கோடி நிதி ஒதுக்கீடு மிகவும் குறைவானது.
மேலும், ஒட்டுமொத்த தொழிற்துறைக்கே ரூ.2,140 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. இது தொழில்வளர்ச்சிக்கு போதுமானதாக இருக்காது, கூடுதல் நிதி ஒதுக்கியிருக்க வேண்டும்.
அனைத்து மாவட்டங்களிலும் சிறு தொழில்களுக்கு எனத் தனி தொழிற்பேட்டைகளை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம். தற்போது அரசு 5 இடங்களில் சிப்காட் வளாகங்கள் அமைக்கப்படும் என அறிவித்துள்ளது. அந்த சிப்காட் வளாகங்களிலாவது குறு மற்றும் சிறு தொழில்களுக்கு சலுகை விலையில் மனைகள்/இடங்கள் வழங்க வேண்டும். அப்போதுதான் புதிய தொழிற்சாலைகள் தொடங்குவதற்கு சாதகமான சூழல் உருவாகும் எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "விவசாய கடன் தள்ளுபடி எங்கே?".. விஜய் அரசின் பட்ஜெட்டை கிழித்த பிரேமலதா!
மின் கட்டண உயர்வு குறித்துக் குறிப்பிட்ட அவர், தொழில்களுக்கான மின்கட்டணத்தில் 'நிலைக்கட்டணத்தை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி கடந்த வாரம் முதலமைச்சரை நேரில் சந்தித்துக் கோரிக்கை மனு அளித்தோம். பரிசீலிப்பதாக அவர் உறுதியளித்திருந்தார். ஆனால், பட்ஜெட்டில் அதுகுறித்த எந்த அறிவிப்பும் வரவில்லை. திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் நிலைக்கட்டணம் குறைக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், இந்த பட்ஜெட்டில் அறிவிப்பு இல்லாதது வருத்தமளிக்கிறது.
கடந்த பட்ஜெட்களுடன் ஒப்பிடுகையில் இந்த நிதிநிலை அறிக்கை தொழில் அமைப்புகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை அரசு விரைவில் வெளியிட உள்ள புதிய தொழிற்கொள்கை யிலாவது சிறு, குறு தொழில்களுக்கான உரிய சலுகைகளும் மாற்றங்களும் இடம்பெறும் என எதிர்பார்ப்பதாகத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: செப்.8 வரை சட்டமன்ற கூட்டத் தொடர்.. சபாநாயகர் பிரபாகர் அறிவிப்பு..! பெரும் எதிர்பார்ப்பு..!!