வடகிழக்குப் பருவமழையால் மதுரை மாநகர் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ள நிலையில், மாநகராட்சி நிர்வாகம் செயல்படவில்லை எனக் கூறி, சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஆர்.பி.உதயகுமார், தி.மு.க. அரசு மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
வரும் 7-ஆம் தேதி மதுரைக்கு வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'காணாமல் போன மேயரையும், சாலைகளையும் கண்டுபிடித்துத் தருவாரா?' என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
தி.மு.க. அரசின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்த ஆர்.பி.உதயகுமார் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது,
இதையும் படிங்க: அதிகாரிகள் அலட்சியம்: ₹3.25 கோடி இழப்பீட்டை வழங்க தாமதம்! மதுரை வட்டாச்சியர் அலுவலகப் பொருட்களை ஜப்தி செய்த நீதிமன்ற ஊழியர்கள்!
வடகிழக்குப் பருவமழையால் மதுரை தத்தளிக்கும் நிலையில், 'ரோடையும் காணவில்லை, மேயரையும் காணவில்லை, மண்டல தலைவரையும் காணவில்லை' என மக்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

சிறிய மழை பெய்தாலும் வாகன ஓட்டிகள் உயிரைக் கையிலே பிடித்து சாகசப் பயணம் மேற்கொள்ளும் நிலையில்தான் மதுரை மாநகர் இருக்கிறது. சாலைகள் பல்லாங்குழியாகப் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
ஒருபுறம் வடகிழக்குப் பருவமழை, இன்னொரு புறம் வாக்காளர் சிறப்புத் திருத்தம் எனப் பணிகள் இருக்கும்போது, அதைத் தாண்டி மதுரையில் 'விளம்பர விழாவை' நடத்துவதற்கு ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகத்தையும் அமைச்சர்கள் வழிநடத்தி வருகின்றார்கள்.
காணாமல் போன சாலையை மீட்டுத் தருவார்களா? அதேபோல், காணாமல் போன மதுரை மேயரையும், மண்டல தலைவர்களையும் மீட்டுத் தருவார்களா என மக்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
எடப்பாடியார் கொண்டு வந்த கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நான்கரை ஆண்டு காலம் தி.மு.க. அரசு காலதாமதம் செய்து, இப்போது மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வருகிறது. அந்தப் பணிக்காகத் தோண்டப்பட்ட சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளது, பள்ளங்கள் மூடப்படவில்லை. பள்ளங்கள் மூடப்படாததால், குழியிலே விழுந்து உயிர்ப்பலி ஏற்படும் என்கிற அச்சம் இருக்கிறது. வாகன ஓட்டிகள் மரண பயத்தில் பயணம் செய்கின்றனர்.
வரும் 7-ஆம் தேதி மதுரைக்கு வருகை தரும் முதலமைச்சர், 'விளம்பர வெளிச்சம் தேடுகிற அந்த விழாவிலே பயனாளிகளை ஏமாற்றுகிற நாடகத்தை நிறுத்திவிட்டு', மக்களுக்குப் பயனுள்ள நலத்திட்டங்களை வழங்குவதற்கும், பணிகளை மேற்கொள்வதற்கும் இந்த விழாவை உரிய நடவடிக்கை எடுக்கப் பயன்படுத்துவாரா என்றும் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமிக்கு பாடம் புகட்ட செங்கோட்டையன் தயார் - டிடிவி தினகரன் கடும் விமர்சனம்!