திமுக கூட்டணியில் சில ஏமாற்றங்கள் இருப்பதை மறுப்பதற்கில்லை. ஆனாலும் தமிழகத்தின் எதிர்காலம் கருதி திமுக கூட்டணியில் உள்ளோம் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.
தென்காசி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "மத்திய அரசு நெடுஞ்சாலைகளில் உள்ள சில சுங்கச்சாவடிகளை அகற்றுவதாக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அதே நேரத்தில் புதிதாக சுங்கச்சாவடிகளை அமைத்து வருகிறது. சுங்கச்சாவடிகளில் வசூலாகும் பணத்தை வைத்து சாலையையும் சரியான முறையில் சீரமைப்பதில்லை. இதைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.

தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெறும் வகையில் வருகிற சட்டப்பேரவை தேர்தலில் தனி சின்னத்தில் போட்டியிடுவோம். கரோனா இரண்டாம் அலை, கடுமையான நிதி நெருக்கடி போன்ற இக்கட்டான சூழலில்தான் திமுக ஆட்சிக்கு வந்தது. அதையெல்லாம் கடந்து திமுக அரசு கடந்த 4 ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. பெரும்பாலான தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றியுள்ளது.
மத்திய அரசின் நெருக்கடி, நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் போன்ற நிலையிலும் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதிகாரத்தில் பங்கு பெற வேண்டும் என்கிற லட்சியம், ஆசை எல்லா அரசியல் கட்சிகளுக்கும் இருக்கும். அதை குறை சொல்ல முடியாது. தமிழகத்தில் இண்டியா கூட்டணி வலுவான நிலையில்தான் உள்ளது. மதவாத சக்திகள் தமிழகத்தில் வேரூன்ற முயற்சிக்கின்றன. எனவே, இந்தக் காலகட்டத்தில் கூட்டணியில் குழப்பத்தை உருவாக்க நாங்கள் விரும்பவில்லை.

அதனால் அதிகாரத்தில் பங்கு வேண்டும் என நாங்கள் கேட்கப்போவதும் இல்லை. தேர்தல் அங்கீகாரம் பெறும் அளவில் திமுக கூட்டணியில் இடம் கேட்போம். அண்ணா காலத்தில் இருந்ததை விட, மு. கருணாநிதி காலத்தில் இருந்ததைவிட தற்போது அதிகமாக அச்சுறுத்தும் வகையில் மதவாத சக்திகள் நெருக்கடி இப்போது உள்ளது. மதவாத சக்திகளை உறுதியாக எதிர்க்கும் தலைமையாக திமுக இருந்து வருகிறது. அதனால், திமுக கூட்டணியில் உள்ளோம். கூட்டணியில் சில ஏமாற்றங்கள் இருப்பதை மறுப்பதற்கு இல்லை. தமிழகத்தின் எதிர்காலம் கருதிதான் நாங்கள் திமுக கூட்டணியில் உள்ளோம்.
இதையும் படிங்க: மிரட்டல், உருட்டல்களுக்கு எல்லாம் திமுக பயப்படாது! பாஜகவை நேரடியாக தாக்கிய வைகோ..!

பாஜவுடன் சேரமாட்டோம் என விஜய் கூறியுள்ளார். அதனால், மூன்றாவது அணி உருவாக வாய்ப்பு உள்ளது. கடந்த காலங்களில் மூன்றாவது அணி உருவாக்க முயற்சித்தாலும் அது வெற்றி பெற்றதில்லை. திமுக கூட்டணி அல்லது அதிமுக கூட்டணி ஆட்சி அமைக்கும் என்ற நிலைதான் தமிழகத்தில் எப்போதும் உள்ளது" என்று துரை வைகோ தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: கமலுக்கு எம்.பி. பதவி.. வைகோவுக்கு உண்டா.? கிடைக்காவிட்டால் மதிமுக என்ன செய்யும்.. வைகோ அதிரடி!