திருச்சி பஞ்சப்பூரில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி பேருந்து முனையத்தில், ஆம்னி பேருந்துகளுக்கான பிரத்யேகப் பேருந்து நிலையத்தை அமைச்சர் கே.என்.நேரு இன்று (ஜனவரி 7) திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட ஆட்சியர் சரவணன், மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் ஆணையர் மதுபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அரசியல் நிலவரம் மற்றும் மாவட்ட வளர்ச்சிப் பணிகள் குறித்து விரிவாகப் பேசினார்.
இதையும் படிங்க: வைகோவின் 'சமத்துவ நடைபயணம்' இன்று தொடக்கம்! தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, "பாமக கடந்த தேர்தலிலும் பாஜக கூட்டணியில்தான் இருந்தது, அப்போதும் நாங்கள் வெற்றி பெற்றுதான் ஆட்சிக்கு வந்தோம்; ராமதாஸ் எங்களுடன் கூட்டணிக்கு வருவாரா என்பது குறித்து எங்களுக்குத் தெரியாது" எனத் தெரிவித்தார். தொடர்ந்து ஆளுநர் மீது குற்றம் சாட்டிய அவர், "ஊழல் செய்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க நாங்கள் அனுமதி கோரியும், ஆளுநர் அதற்கு ஒப்புதல் தரவில்லை; அவர் அனுமதி தந்திருந்தால் இந்நேரம் நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும்" எனப் பரபரப்பாகக் குறிப்பிட்டார். மேலும், வழக்கறிஞர் இன்பதுரை தன் மீது வழக்குத் தொடர நீதிமன்றத்தை நாடியிருப்பது குறித்தும் அவர் தனது கருத்தைப் பதிவு செய்தார்.
பஞ்சப்பூர் பேருந்து முனையத்தின் வசதிகள் குறித்துப் பேசிய அமைச்சர், அங்கு வணிக வளாகக் கட்டுமானப் பணிகள் மற்றும் மார்க்கெட் பணிகளை விரைந்து முடித்து, முதலமைச்சரின் கைகளால் அவை திறந்து வைக்கப்படும் என்றார். பயணிகளின் வசதிக்காகப் பஞ்சப்பூரில் பி.எஸ்.என்.எல் (BSNL) டவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், மாநகரப் பகுதியில் பேருந்து முன்பதிவு மையம் திறப்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும், செங்கிப்படியில் நடைபெறவுள்ள மகளிர் மாநாட்டிற்கு சுமார் 1.25 லட்சம் பேர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அவர் உறுதி அளித்தார்.
இதையும் படிங்க: “திருச்சியில் அமித் ஷாவின் மாஸ்டர் பிளான்!” - நயினார் யாத்திரை நிறைவு விழாவில் காத்திருக்கும் 'சர்ப்ரைஸ்'!