திருச்சி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான காலை உணவு திட்ட விரிவாக்க நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஸ்ரீரங்கம் கோயில் நில விவகாரம் முதல் அரசியல் விமர்சனங்கள் வரை பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்க வேண்டும் என்பதற்காக காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். திருச்சி மாவட்டத்தில் ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் மொத்தம் 590 பள்ளிகளைச் சேர்ந்த 63,157 மாணவர்கள் இந்த விரிவாக்கத்தின் மூலம் பயன்பெறுவார்கள் என்றும் அவர் கூறினார்.
இதனிடையே, ஸ்ரீரங்கம் பகுதியில் கோயில் நிலங்களை பட்டாவுடன் விற்பனை செய்வதாக விளம்பரங்கள் வெளியிடப்படுவது குறித்து புகார் அளிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். கோயில் நிலம் தொடர்பான முறைகேடு குறித்து காவல்துறை விசாரணை தொடங்கியுள்ளதாகவும், விசாரணையின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட அனைவர்மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: சேகர்பாபுவுக்கு இது அவமானமா? அதிகாரிகளுக்கு வேற வேலையே இல்லையா? அமைச்சர் ரமேஷ் ஆவேசம்!

கோயில் நில விவகாரத்தில் சிலர் முன்ஜாமீன் பெறுவது குறித்தும் அமைச்சர் கேள்வி எழுப்பினார். புகார் பொய்யானது என்றால் விசாரணையை நேரில் எதிர்கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார். முன்னாள் நீதிபதி, சார்பதிவாளர் உள்ளிட்ட தொடர்புடையவர்கள் குறித்தும் விசாரணை நடைபெறும் என கூறினார்.
ஸ்ரீரங்கம் கோயில் மனை தொடர்பான வரிவசூலில் பல்வேறு புகார்கள் வந்துள்ளதாகவும், அதுகுறித்து ஆய்வு நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். பிரச்சினைகள் இருப்பது கண்டறியப்பட்டால் அவற்றை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.
இதைத்தொடர்ந்து முன்னாள் கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் குறித்து பேசிய அமைச்சர் ரமேஷ், அவர் தனது தொகுதியில் போதிய பணிகளை மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார். அவரை வெற்றி பெறச் செய்தது குறித்து மக்கள் அதிருப்தியடைந்ததாலேயே தேர்தலில் தோல்வியடையச் செய்ததாகவும் அமைச்சர் கூறினார்.
சட்டப்பேரவை நடவடிக்கைகள் குறித்து உதயநிதி ஸ்டாலின் தெரிவித்த கருத்துகளுக்கும் அமைச்சர் பதிலடி கொடுத்தார். “சட்டசபையை ஒழுங்காக கவனித்திருந்தால் யார் அமைச்சர், யார் எம்எல்ஏ என்பது தெரிந்திருக்கும்” எனக் கூறிய அவர், வகுப்பை கவனிக்காமல் பேசுவது போன்றது என விமர்சித்தார்.
மேலும், கோயில் கும்பாபிஷேக பணிகளை அதிகாரிகளுடன் ஆய்வு செய்வதை விஐபி தரிசனத்துடன் ஒப்பிடுவது சரியல்ல என்றும் அமைச்சர் தெரிவித்தார். கும்பாபிஷேக நிகழ்வில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டதாகவும் அவர் விளக்கம் அளித்தார்.
மின்வெட்டு தொடர்பான விமர்சனங்களுக்கும் பதிலளித்த அமைச்சர், பிரச்சினைகள் படிப்படியாக சரிசெய்யப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதுதொடர்பாக அரசு தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: திமுகவில் மாவட்டச் செயலாளர் பதவிக்கு கடும் போட்டி! உதயநிதி ஆதரவாளர்கள் புகைச்சல்!