தவெக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் இனி அரசு மருத்துவமனைகளில் மட்டுமே சிகிச்சை பெறுவார்கள் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண் ராஜ் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்த நிலையில், நேற்று காய்ச்சல் காரணமாக கோவையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் சிகிச்சை பெற்றது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையனிடம் “கே.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறீர்கள்; அதைப் பற்றி கூறுங்கள்” என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “என்னைப் பொறுத்தவரையில், கடந்த எட்டு மாதங்களாக கடுமையாக உழைத்து வருகிறேன். அதன் காரணமாக, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை மேற்கொள்ளப்படும் ‘மாஸ்டர் ஹெல்த் செக்கப்’ பரிசோதனைகளை செய்வது வழக்கம். உடல்நலத்தின் அனைத்து அம்சங்களும் சரியாக உள்ளனவா என்பதை கண்காணிப்பதற்காக ஆண்டுக்கு இருமுறை இந்த பரிசோதனைகள் மேற்கொண்டு வருகிறேன்.
இப்போது எட்டு மாதங்கள் கடந்த நிலையில், அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் பெறப்பட்டுள்ளன. அனைத்து பரிசோதனைகளும் நன்றாக உள்ளன என்று மருத்துவமனை உறுதிப்படுத்தியுள்ளது. ஆகவே, மீண்டும் முழு உற்சாகத்துடன் அனைத்து பணிகளையும் மேற்கொள்ள சென்னை திரும்பிக் கொண்டிருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
இதையும் படிங்க: ரூ.300 கோடி மோசடி செய்த நபருடன் போட்டோ! வெடித்தது சர்ச்சை! அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!
“தமிழக வெற்றி கழக அமைச்சர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளில்தான் சிகிச்சை பெற வேண்டும் என்ற தகவல் வெளியாகியுள்ளதே?” என்ற கேள்விக்கு, “என்னைப் பொறுத்தவரையில், நான் எப்போதும் கேஎம்சி மருத்துவமனையில்தான் சிகிச்சை பெறுவது வழக்கம். ஓய்வு எடுக்க வேண்டிய சூழ்நிலைகளிலும் அங்கேயே தங்குவது வழக்கமாக உள்ளது. அந்த நடைமுறையையே தொடர்ந்து பின்பற்றி வருகிறேன். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது எனக்கு இலவசமாக கிடைக்கும் ஒரு வசதி. அது என் உறவினருடைய மருத்துவமனை என்பதால் இலவசமாகவே சிகிச்சை வழங்கப்படுகிறது. தனியார் மருத்துவமனைக்கு சென்று அரசின் நிதியை செலவழிக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும், சென்னை வரும்போதோ அல்லது வெளியூர் செல்லும்போதோ, இரவு நேரங்களில் விமானப் பயணம் இருந்தால் அந்த மருத்துவமனையில் உள்ள விடுதியில் தங்கி ஓய்வெடுப்பதும் வழக்கமாக உள்ளது. இது தொடர்ந்து நடைபெற்று வரும் நடைமுறையே.” என்றார்.
“சிறுமி கொலை வழக்கில், ‘தாயாருக்குத் தெரியாமல் எங்களிடம் கையெழுத்து வாங்கிவிட்டார்கள்’ என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதே?” என்ற கேள்விக்கு, “அது குறித்து காவல் துறை ஐ.ஜி. ஏற்கனவே தெளிவான விளக்கங்களை வழங்கியுள்ளார். அதேபோல், சட்டத்துறைக்கும் முதலமைச்சர் உரிய உத்தரவுகளை வழங்கியுள்ளார். இதுகுறித்து தேவையான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும்” எனக்கூறினார்.
“பெண்களுக்கான ‘விடியல் பயணம்’ என்ற இலவச பேருந்துத் திட்டம் எப்போது அமல்படுத்தப்படும்?” என்ற கேள்விக்கு, “திராவிட முன்னேற்ற கழகம் இந்தத் திட்டத்தை எவ்வாறு கொண்டு வந்தது என்பது உங்களுக்குத் தெரியும். பல ஆண்டுகளுக்குப் பிறகே அது நடைமுறைக்கு வந்தது. அதுபோல, ஒவ்வொரு திட்டமும் அரசின் நிதிநிலையைப் பொருத்து படிப்படியாக அமல்படுத்தப்படும். எந்தத் திட்டத்தை எப்போது செயல்படுத்த வேண்டும் என்பது முதலமைச்சர் அவர்கள் எடுக்கும் முடிவு. ஆகவே, இந்தக் கேள்விக்கு அவர்தான் சரியான பதில் அளிக்க முடியும். அனைத்து திட்டங்களும் எந்த காலக்கட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதையும் முதலமைச்சரே தீர்மானிப்பார்.” என்றார்
இதையும் படிங்க: அமைச்சரவை விரிவாக்கம் எப்போது?! எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா பாணியில் விஜய்! செங்கோட்டையன் சூசகம்!