நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளருமான கார்த்திகா கைது செய்யப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். கார்த்திகாவையும் அவரது கட்சியினரையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலின்போது, தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதல்வர் விஜய் பிரசாரம் மேற்கொள்ள வந்த வழித்தடத்தில் கார்த்திகா செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. காவல்துறை அனுமதியை மீறிச் சென்றதாகக் கூறி அவர் தடுக்கப்பட்ட நிலையில், சாலை மறியலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பாக, காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதல்வர் சென்ற பாதையில் பிரசாரம் மேற்கொண்டது, முதல்வர் குறித்து அவதூறாகப் பேசியது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் கார்த்திகா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கோவையில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்ற தாராபுரம் காவல்துறையினர், கார்த்திகாவையும் அவரது கணவரையும் கைது செய்தனர்.
இதையும் படிங்க: திமுகவின் கோரிக்கைக்கு ஜனாதிபதி மாளிகை மௌனம்? எம்.பிக்களை சந்திக்க மறுக்கும் திரவுபதி முர்மு?!
இந்தக் கைது நடவடிக்கையைக் கண்டித்து மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுவாழ்க்கையில் ஈடுபடும் பெண்களை அரசியல் வேறுபாடுகளைக் கடந்து ஊக்குவிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

விமர்சனங்களுக்கு அரசியல் ரீதியாகப் பதிலளிப்பதற்குப் பதிலாகக் கைது நடவடிக்கைகளை மேற்கொள்வது ஜனநாயக நடைமுறைக்கு உகந்ததல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், இடைத்தேர்தலின்போது அதிகார துஷ்பிரயோகம் நடைபெற்றதாகக் குற்றம்சாட்டிய ஸ்டாலின், அதைக் கேள்வி எழுப்பியதற்காக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்படுவதாக விமர்சித்துள்ளார். ஜாமீனில் வெளிவரக்கூடிய வழக்குகளில் காவல்துறையினர் கைது நடவடிக்கைகளை மேற்கொள்ளும்போது சட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தவெக நிர்வாகி கைது செய்யப்பட்ட விவகாரத்திலிருந்து கவனத்தைத் திசைதிருப்பவே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், பாஜக மற்றும் தவெக அரசியல் நடவடிக்கைகளை ஒப்பிட்டு விமர்சித்த அவர், கார்த்திகா மற்றும் அவரது கட்சியினரை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
கார்த்திகா மீதான வழக்குகளின் சட்ட நடவடிக்கைகள் ஒருபுறம் தொடரும் நிலையில், இந்தக் கைது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள கண்டனம் தமிழக அரசியலில் கவனத்தைப் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: அக்டோபர் 17-ல் திமுக எம்.பி.க்கள் கூட்டம்: பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு!