விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே தாயின் அருகில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி மர்மமான முறையில் காணாமல் போன வழக்கில், 10 நாட்கள் தீவிர விசாரணை நடத்தியும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததைத் தொடர்ந்து, இவ்வழக்கின் விசாரணையை உடனடியாக சிபிசிஐடி (CB-CID) பிரிவுக்கு மாற்றி தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் (DGP) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
செஞ்சி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்த 7 வயது சிறுமி, கடந்த அக்டோபர் 12-ஆம் தேதி அதிகாலையில் தனது வீட்டில் தாயின் அருகே தூங்கிக் கொண்டிருந்த போது திடீரென மாயமானார். இதுகுறித்து சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
சிறுமி மாயமாகி இன்றுடன் 10 நாட்கள் நிறைவடைந்துவிட்ட போதிலும், அவர் எங்கு இருக்கிறார் அல்லது அவருக்கு என்ன நேர்ந்தது என்பது குறித்த எந்தவொரு உறுதியான தடயமும் உள்ளூர் போலீசாருக்குக் கிடைக்கவில்லை. இந்த வழக்கில் துப்பு துலக்குவதற்காக 3 டி.எஸ்.பி.க்கள் மற்றும் 10 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இதையும் படிங்க: டெல்லியில் எகிறிய காற்று மாசுபாடு: GRAP-1 முதல்நிலை நடவடிக்கைகள் அதிரடி அமல்!

சம்பவத்தன்று அப்பகுதியில் பதிவான சுமார் 600 பேரின் செல்போன் எண்களைச் சேகரித்து சைபர் கிரைம் மூலம் ஆய்வு செய்தும், உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் உட்பட 20 பேரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியும், அதிவிரைவுப் படையினரைக் கொண்டு மலை இடுக்குகளில் தேடுதல் வேட்டை நடத்தியும் உள்ளூர் காவல்துறையினரால் வழக்கில் எந்தவொரு முக்கிய முன்னேற்றத்தையும் எட்ட முடியவில்லை.
விசாரணையில் ஏற்பட்ட இந்தத் தொய்வு மற்றும் சிறுமியின் பெற்றோரின் தாங்க முடியாத தவிப்பு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, வழக்கைச் சிறப்புப் புலனாய்வு அமைப்பான சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழ்நாடு டிஜிபி இன்று அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சத்தியமங்கலம் போலீசார் இதுவரை சேகரித்த ஆவணங்கள், செல்போன் அழைப்பு விவரங்கள் மற்றும் விசாரணை அறிக்கைகள் அனைத்தும் விரைவில் சிபிசிஐடி அதிகாரிகளிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட உள்ளன. வழக்கை உடனடியாகக் கையில் எடுக்கவுள்ள சிபிசிஐடி அதிகாரிகள், புதிய கோணங்களில் விசாரணையைத் தீவிரப்படுத்தி மாயமான 7 வயது சிறுமியை விரைவில் பத்திரமாக மீட்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: சனநாயகம் சாகவில்லை! கார்த்திகா கைதை எதிர்த்த அனைத்து கட்சி தலைவர்களுக்கும் சீமான் நன்றி!