செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த நெம்மேலியில் சென்னை குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கடல் நீரை குடிநீராக்கும் நிலைய கட்டுமான பணிகள் கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திமுக ஆட்சியில் ரூபாய் 1520.82 கோடி மதிப்பில் ஜப்பான் உள்ளிட்ட வெளி நாடுகளின் பங்களிப்போடு துவங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
தற்போது தேர்தல் முடிந்து தமிழக வெற்றி கழகம் ஆட்சிப் பொறுப்பேற்று விஜய் தமிழக முதல்வராக உள்ளார் இந்நிலையில் இன்றைய தினம் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்திற்கு ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பணிக்கான கல்வெட்டில் முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. தற்போது கல்வெட்டில் பொறிக்கப்பட்டிருந்த பெயர்களை அகற்றியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கு கடும் கண்டனங்களை தெரிவித்த திமுக, 2021ஆம் ஆண்டு அவரே முதலமைச்சரான நிலையில், பெருகி வரும் சென்னையின் மக்கள் தொகையையும், விரிந்து வரும் சென்னை மாநகராட்சியின் பரப்பளவையும் கருத்தில் கொண்டு 24-02.2024 அன்று நெம்மேலி கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் இரண்டாவது பெரிய அலகுக்கான அடிக்கல்லை நாட்டி, தற்போது பணிகள் ஏறத்தாழ நிறைவடையும் நிலையில், இதனைப் பார்வையிட முதல்வர் விஜய் வருகிறார் என்கிற அற்ப காரணத்திற்காக, இரண்டாம் அலகு திட்டத்தின் கல்வெட்டை அகற்றியிருக்கிறது த.வெ.க அரசு என குற்றச்சாட்டியது.
இதையும் படிங்க: எதையும் உருப்படியா உருவாக்க வக்கில்ல... விஜய் அரசே வெட்கமே இல்லையா? - விடிந்ததுமே வெடித்தெழுந்த திமுக...!
மேலும் ஆட்சிக்கு வந்த 50 நாட்களில் எந்தவொரு உருப்படியான திட்டத்தையும் உருவாக்க வக்கில்லாத விஜய் அரசு, திராவிட மாடல் அரசின் முதல்வர் தொடங்கிய திட்டத்தின் அடிக்கல்லை அகற்றுவது அதன் பயபீதியையே காட்டுகிறது. முடிவடையும் நிலையில் உள்ள திராவிட மாடல் அரசின் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மீது ஸ்டிக்கர் ஒட்டுவதற்காக, கல்வெட்டை அகற்றுவது வெட்கமாயில்லையா திறமையற்ற விஜய் அரசே?” என கடுமையாக சாடியது.
இதற்கு அரசு அதிகாரிகள் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. நெம்மேலியில் பத்து நாட்களாக பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. நெடுஞ்சாலையோரம் இருப்பதால் அதிர்வுகள் ஏற்பட்டு கல்வெட்டு சேதமாகி இருந்தது. எனவே கல்வெட்டில் உள்ள எழுத்துக்களுக்கு நிரந்தர பாதிப்பு இல்லாத வகையில் சரியான முறையில் மீண்டும் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக எழுத்துக்கள் நீக்கப்பட்டதோ தவிர, கல்வெட்டு நிரந்தரமாக நீக்கப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: "குடும்பத்துடன் லண்டன் சென்ற ஸ்டாலின்"..! சென்னை ஏர்போர்ட்டில் திரண்ட திமுகவினர்..!