சென்னை தேனாம்பேட்டையில் நேற்று நடைபெற்ற 2026-ஆம் ஆண்டுக்கான விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழாவில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து விளக்கம் அளித்தார்.
அப்போது பேசிய அவர், "நான் எந்தப் பதவி ஆசையாலும் அரசியல் செய்யவில்லை. சிலர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள். ஒருவர், நான் துணை முதலமைச்சர் பதவி கேட்டு பேச்சுவார்த்தை நடத்தினேன்; அது நிறைவேறாததால் வேறு நிலைப்பாட்டை எடுத்தேன் என்கிறார். இன்னொருவர், கட்சி நிதி தொடர்பாக பிரச்சினை எழுப்பியதாகவும், அது நிறைவேறிய பிறகே ஆதரவு தெரிவித்ததாகவும் கூறுகிறார். மேலும் சிலர், திமுகவும் அதிமுகவும் இணைந்து என்னை முதலமைச்சராக்கப் போவதாக கூறி, அந்த நம்பிக்கையில்தான் நான் காத்திருந்தேன் என்றும், அது நடக்காததால் வேறு முடிவு எடுத்தேன் என்றும் விமர்சிக்கிறார்கள்.
என்னைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். என்னை மதிப்பிடும் தகுதியும் ஆளுமையும் வேறு யாருக்கும் இல்லை. உண்மையில் என்ன நடந்தது என்பதை நான் முழுமையாகச் சொன்னால் பல விஷயங்கள் வெளிச்சத்திற்கு வரும். ஆனால் அதைப் பற்றி இதுவரை நான் பேசவில்லை," என்றார்.
இதையும் படிங்க: திருமாவளவன் துணை முதல்வராக வேண்டும்! காலம் பதில் சொல்லும்! அமைச்சர் வன்னி அரசு சூசகம்!
தொடர்ந்து பேசிய அவர், "திமுகவுக்கு யார் துரோகம் செய்தார்கள் என்று அனைவரின் மனசாட்சிக்கும் தெரியும். நான் நட்பில் எப்போதும் நேர்மையாக இருந்துள்ளேன். தேர்தலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே என்னை கூட்டணியில் இருந்து விலக்க பல்வேறு முயற்சிகள் நடந்தன. பல ஆசை வார்த்தைகளும் கூறப்பட்டன. ஆனால் அவற்றுக்கு நான் ஒருபோதும் இணங்கவில்லை.
நானும் இணைந்து உருவாக்கிய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை பலவீனப்படுத்த நான் ஒருபோதும் இடமளிக்க மாட்டேன். என்னை அணுகியவர்களிடமும் அதைத்தான் தெளிவாகக் கூறினேன்.
'எங்கள் கூட்டணிக்கு வந்தால் ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு வழங்கத் தயாராக இருக்கிறோம்' என்ற அழைப்பு விடுக்கப்பட்டபோது, அது விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கான அழைப்புதான் என்பதை அரசியல் உலகமே புரிந்துகொண்டது. அப்போது விரும்பியிருந்தால் நான் அந்த அழைப்பை ஏற்று புதிய கூட்டணியை உருவாக்கியிருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எந்த வகையிலும் துரோகம் செய்யவில்லை. இதற்கு மாறாக யாராவது ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா? வெளிப்படையாக விவாதிக்கத் தயாரா?
தவெகவுக்கு ஆதரவு தெரிவிக்கும் முடிவை எடுக்கும் கடைசி தருணம் வரை திமுக தலைமையிடம் எங்களின் நிலைப்பாட்டை வெளிப்படையாக தெரிவித்தோம். நாங்கள் எப்படிப்பட்ட முடிவை எடுக்கப் போகிறோம், அதற்கான காரணம் என்ன என்பதையும் மறைக்காமல் கூறினோம்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியில் இருந்த ஒருவரை திமுகவில் இணைத்தபோதே, விடுதலை சிறுத்தைகளுடன் அரசியல் கூட்டணி இல்லை என்று அறிவித்தது திமுக தலைமையே. அதை நான் கூறவில்லை. அந்த முடிவை எடுத்தது மதிப்பிற்குரிய முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான். அவர் மீது எனக்குள்ள மரியாதை என்றும் குறையாது. அது தனிப்பட்ட மரியாதை. ஆனால் திமுக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கிடையேயான அரசியல் உறவு இல்லை என்று அறிவித்தது அவர்தான்; அந்த முடிவை நான் எடுக்கவில்லை," என்று திருமாவளவன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தவெக அமைச்சரவையில் திருமாவளவனை துணை முதல்வராக்க வேண்டும்!! விசிக கூட்டத்தில் சிறப்பு தீர்மானம்!