சென்னை: நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம் ஜனவரி 9 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்படத்துக்கு மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் (CBFC) இன்னும் சான்றிதழ் வழங்காததால் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இதற்கு அரசியல் காரணங்கள் உள்ளதாக பலரும் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சி பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக சாடியுள்ளது. ஜனநாயகன் படத்தை ஒடுக்குவதன் மூலம் தமிழர்களை மீண்டும் அவமானப்படுத்தியுள்ளார் என்று குற்றம் சாட்டியுள்ளது.
பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், தணிக்கை சான்றிதழ் தாமதம் காரணமாக பட வெளியீடு தள்ளிவைக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவான இப்படம் விஜயின் கடைசி திரைப்படமாக இருப்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் சென்சார் வாரியத்தின் தாமதம் காரணமாக படக்குழு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்னும் வரவில்லை.
இதையும் படிங்க: உரிமைக்காக தெருவில் இறங்கிப் போராடுறாங்க... ஊதியத்தை பிடுங்குறிங்க...! நயினார் கண்டனம்..!
இச்சம்பவத்தை காங்கிரஸ் கட்சி அரசியல் ரீதியாக விமர்சித்துள்ளது. காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது அறிக்கையில், "அதிகாரத்தின் முன்பு கலை மண்டியிட வேண்டிய கட்டாயம் இருந்தால் ஜனநாயகம் நிலைக்காது. சினிமாவையும் அதன் கருத்துக்களையும் கட்டுப்படுத்த சென்சார் வாரியம் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது.
அதே சமயம் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பிரச்சாரங்கள் 'கலாச்சாரம்' என்ற பெயரில் திணிக்கப்படுகின்றன. ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டிய நிறுவனங்கள் மிரட்டல் கருவிகளாக மாற்றப்படுகின்றன. ED, CBI, IT போன்றவற்றை தொடர்ந்து சென்சார் வாரியமும் எதிர்க்கட்சிகளை ஒடுக்க பயன்படுத்தப்படுகிறது. சினிமாவுக்கு அரசியல் அனுமதி தேவையில்லை, அரசியல் அமைப்புச் சட்ட பாதுகாப்பு தேவை" என்று கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார். அவர் ராகுல் காந்தியின் 2017 ஆம் ஆண்டு பதிவை மேற்கோள் காட்டி, "ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு ராகுல் காந்தி, பிரதமர் மோடி தமிழ் சினிமாவை அடக்குவதன் மூலம் தமிழ் கலாச்சாரத்தையும் பெருமையையும் அவமதிக்க வேண்டாம் என்று எச்சரித்திருந்தார்.
ஆனால் இப்போது 'ஜனநாயகன்' படத்தை வெளியிட விடாமல் சென்சார் போர்டு மூலம் மோடி தடுக்கிறார். ஜனநாயகனை ஒடுக்குவதன் மூலம் தமிழர்களை மீண்டும் அவமானப்படுத்தியுள்ளார்" என்று கூறியுள்ளார்.
ராகுல் காந்தியின் 2017 அக்டோபர் 21 ஆம் தேதி பதிவில், விஜய் நடித்த 'மெர்சல்' படத்தில் தேவையின்றி தலையிட்டு தமிழர்களின் பெருமைகளை சிதைக்காதீர்கள் என்று கூறியிருந்தார். அந்தப் பதிவை மேற்கோள் காட்டியுள்ள பிரவீன் சக்கரவர்த்தி, மோடி அரசு தமிழ் சினிமாவை தொடர்ந்து அடக்க முயல்வதாக குற்றம் சாட்டியுள்ளார்.
இந்தச் சர்ச்சை தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜயின் தவெக கட்சி அரசியலில் புதிய சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில், இப்படத்தின் தாமதம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று எதிர்க்கட்சிகள் விமர்சிக்கின்றன. படக்குழு உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: உஷ்ஷ்ஷ்!! கப்சிப்னு இருக்கணும்! காங்., வாய் பேசினால் அவ்ளோதான்! ஸ்டாலின் ரகசிய உத்தரவு!