டிடிவி தினகரன், ஜெயலலிதாவின் நெருங்கிய உறவினரும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளரும் ஆவார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட தலைமைப் போட்டியில் சசிகலா அணியின் முக்கிய நபராக விளங்கினார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணி ஆதிக்கம் செலுத்தியதால், தினகரன் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டு 2018-ல் அமமுகவை தொடங்கினார்.
இதே காலகட்டத்தில் செங்கோட்டையன், அதிமுகவின் மூத்த தலைவராகவும் எம்ஜிஆர் காலத்திலிருந்தே கட்சியில் இருந்தவராகவும் இருந்தார். அவர் இபிஎஸ் அணியுடன் நெருக்கமாக இருந்தார். ஆனால் கட்சியின் ஒற்றுமைக்காக பிரிந்த தலைவர்களை மீண்டும் இணைக்க வேண்டும் என்ற கருத்தை கொண்டிருந்தார். 2025-ல் இவர்களுக்கு இடையிலான உறவு திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியது. செங்கோட்டையன், அதிமுகவை வலுப்படுத்த ஓ.பன்னீர்செல்வம், சசிகலா, தினகரன் ஆகியோரை மீண்டும் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

செப்டம்பர் மாதம் இபிஎஸ்ஸுக்கு 10 நாட்கள் கெடு விதித்து பேசியதும், தினகரனுடன் சந்திப்பு நடத்தியதாக தகவல்கள் பரவின. செங்கோட்டையன் இதை மறுத்தாலும், அக்டோபர் 30-ல் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜையில் ஓபிஎஸ், தினகரன் ஆகியோருடன் ஒன்றாக தோன்றினார். தொடர்ந்து இபிஎஸ்., செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கினார்.இந்நிலையில் செங்கோட்டையன் நவம்பரில் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து, விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார்.
இதையும் படிங்க: 10 வருஷமா உழைக்கிறோம்… பொறுப்பு தரல… செங்கோட்டையினை முற்றுகையிட்ட தவெக தொண்டர்கள்…!
செங்கோட்டையனின் அரசியல் அனுபவம், விஜய்க்கு உறுதுணையாக இருக்கும் என கூறப்பட்டு வருகிறது. மூத்த அரசியல்வாதி செங்கோட்டையன் இன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு டிடிவி தினகரன் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். எனது அன்பிற்குரிய மூத்த சகோதரரும், முன்னாள் அமைச்சரும், தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான செங்கோட்டையன்- க்கு மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக கூறினார். செங்கோட்டையன், நீண்ட ஆயுளோடும்,பூரண உடல் நலத்தோடும் மக்கள் பணியை மேன்மேலும் தொடர எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அதிமுக முக்கிய பிரமுகர்கள் தவெகவில் ஐக்கியம்... செங்கோட்டையன் உறுதி...!