நாடாளுமன்றத்தில் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்றிரவு (பிப்ரவரி 2) இந்த ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளித்தார். இதன்படி, இந்திய பொருட்கள் மீதான அமெரிக்க வரி 25 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்படுகிறது.
எரிசக்தி, தொழில்நுட்பம், வேளாண்மை, நிலக்கரி உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தகத்தை 500 பில்லியன் டாலராக உயர்த்த இந்தியா ஒப்புக்கொண்டுள்ளது என்று டிரம்ப் அறிவித்தார்.
இந்த ஒப்பந்தத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இன்று மக்களவையில் ராகுல் காந்தி பேசியது பெரும் அமளியை ஏற்படுத்தியது. அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, "மோடி ஜி கலக்கமடைந்துள்ளார். கடந்த சில மாதங்களாக முடங்கிக் கிடந்த இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தில் நரேந்திர மோடி நேற்றிரவு கையெழுத்திட்டார். அவர் மீது கடுமையான அழுத்தம் உள்ளது. நரேந்திர மோடியின் பிம்பம் சேதமடையக்கூடும்" என்று கூறினார்.
இதையும் படிங்க: மோடி இப்படி செஞ்சிருக்க கூடாது! பார்லி.யில் வெளிநடப்பு!! அமெரிக்கா வரி குறைப்பு பின்னால் இருக்கும் ப்ளான்!
மேலும், "முதல் முறையாக குடியரசு தலைவர் உரை குறித்து பேச எதிர்க்கட்சி தலைவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. நரேந்திர மோடி ஜி சமரசத்திற்கு உள்ளாகியிருப்பதால், இந்த வர்த்தக ஒப்பந்தத்தில் உங்கள் உழைப்பை விற்றுவிட்டார். அவர் நாட்டை விற்றுவிட்டார்.

நரேந்திர மோடி ஜி பயப்படுகிறார், ஏனென்றால் அவருடைய பிம்பத்தை உருவாக்கியவர்களே இப்போது அந்த பிம்பத்தை உடைக்கிறார்கள். அதானி ஜி மீது அமெரிக்காவில் ஒரு வழக்கு உள்ளது, அது உண்மையில் மோடி ஜி மீதான வழக்குதான். எப்ஸ்டீன் கோப்புகளில் அமெரிக்கா இன்னும் வெளியிடாத பல விஷயங்கள் உள்ளன. அதன் காரணமாகவும் அழுத்தம் உள்ளது. இவைதான் அந்த இரண்டு அழுத்த புள்ளிகள். இதை நாடு புரிந்துகொள்ள வேண்டும்" என்று ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார்.
இந்த ஒப்பந்தம் இந்திய விவசாயிகளை பாதிக்கும் என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. அமெரிக்காவிலிருந்து மலிவு விலை வேளாண் பொருட்கள் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டால், உள்நாட்டு விவசாயிகள் போட்டியிட முடியாமல் தவிப்பார்கள். இது உணவு பாதுகாப்பையும் பாதிக்கும் என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.
ராகுலின் பேச்சு நாடு முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆளும் கட்சி தரப்பில் இது பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்று கூறுகின்றனர். ஆனால் எதிர்க்கட்சிகள் இதை "சமரசம்" என்று சாடுகின்றன. அடுத்த சில நாட்களில் இந்த விவகாரம் நாடாளுமன்றத்தில் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் உட்பட நாடு முழுவதும் விவசாயிகள், அரசியல் கட்சிகள் இதை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நள்ளிரவில் வந்த அறிவிப்பு!! ட்ரம்பிடம் சரணடைந்துவிட்டார் மோடி! வெளுத்து வாங்கும் காங்கிரஸ்!