தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அரசு செலவில் சொகுசு கார் மற்றும் பராமரிப்புத் தொகை வழங்கப்படும் என்ற முதலமைச்சர் விஜயின் அறிவிப்பு 'கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்கும் செயல்' என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மிகக் கடுமையாகச் சாடியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையில், "தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அரசு சார்பில் வாகனமும், ஓட்டுநரும், வாகனப் பராமரிப்புக்காக மாதந்தோறும் ரூ.75 ஆயிரமும், உதவியாளருக்கு ரூ.25 ஆயிரமும் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்திருப்பது பொதுமக்களின் வரிப்பணத்தை அப்பட்டமாக வீணடிக்கும் செயலாகும். சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெரும்பாலான உறுப்பினர்கள் ஏற்கனவே சொந்தமாக வசதியான கார்களை வைத்துள்ளனர். அப்படியிருக்கையில், அவர்களுக்கு மீண்டும் அரசு சார்பில் கார்களும், மாதாந்திரப் பராமரிப்புத் தொகையும் வழங்குவது தமிழக அரசுக்கு அவசியமற்ற கூடுதல் நிதிச்சுமையையே ஏற்படுத்தும்" என்று விமர்சித்துள்ளார்.
மேலும் அவர் சுட்டிக்காட்டுகையில், "தவெக சார்பில் போட்டியிட்டு முதன்முறையாகச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தனது முன்னாள் ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு கார் வழங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், முதலமைச்சர் விஜய் அவர்கள் தனது சொந்த செலவிலோ அல்லது தவெக கட்சி நிதியிலிருந்தோ வாங்கிக் கொடுக்கலாமே தவிர, அரசின் கஜானாவைக் காலி செய்யக்கூடாது என்ற நியாயமான கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 4 முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் விவகாரம்! ஜூலை 30-ல் நேரில் வந்து விளக்கமளிக்க இ.பி.எஸ்-ஸுக்கு அழைப்பு!
தொடர்ந்து தவெக அரசின் நிதி முரண்பாடுகளைச் சாடிய தினகரன், "தமிழக அரசின் கஜானா காலியாக உள்ளதாகவும், மாநிலம் சுமார் ரூ.13 லட்சம் கோடி கடனில் தத்தளிப்பதாகவும் வெள்ளை அறிக்கை வெளியிட்டதுடன், நிதி நெருக்கடியைக் காரணம் காட்டி விவசாயக் கடன் தள்ளுபடி, பெண்களுக்கு மாதம் ரூ.2,500 உரிமைத்தொகை, ஆண்டுக்கு 6 இலவச சிலிண்டர்கள் மற்றும் மகளிருக்கு இலவசப் பேருந்துப் பயணம் போன்ற முக்கியத் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற மறுக்கும் தவெக அரசுக்கு, அனைத்து எம்எல்ஏ-க்களுக்கும் பல நூறு கோடி ரூபாய் செலவில் கார்கள் வாங்க மட்டும் நிதி எங்கிருந்து வந்தது?" என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளார்.
"மக்கள் வரிப்பணத்தில் ஒரு பைசா கூடத் தொட மாட்டேன் என்று மேடைகளில் வீரவசனம் பேசிவிட்டு, தற்போது அதே வரிப்பணத்தில் கோடிக்கணக்கில் கார்களை வாங்கிக் குவிப்பது எந்த வகையில் நியாயமாகும்? சொந்தக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டும் என்ற சுயநல அரசியல் நோக்கத்திற்காக அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தை முதலமைச்சர் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்" என்றும் டிடிவி தினகரன் தனது அறிக்கையில் திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கு! ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு!