தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு வன்மையான கண்டனம் தெரிவித்துள்ளார். பாரம்பரிய இயற்கைப் பானமான ‘கள்’ இறக்கவும் விற்கவும் அனுமதி கோரிய வழக்கில், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில் “கள் பொதுச் சுகாதாரத்திற்குத் தீங்கு விளைவிப்பதால் அதைத் தடை செய்வதே அரசின் கொள்கை முடிவு” என்று கூறப்பட்டிருப்பதை அவர் கடுமையாக விமர்சித்தார்.
பனைமரம் தமிழ்நாட்டின் அடையாளமும் மாநில மரமுமாகும். எந்த ஆதரவும் இல்லாமல் வறண்ட நிலத்திலும் முளைத்து, நிலத்தடி நீரைக் காத்து, பனங்கிழங்கு, பதநீர், நுங்கு, கருப்பட்டி உள்ளிட்டவற்றை மனித குலத்திற்கு வழங்கும் கற்பக விருட்சம் இது. இதிலிருந்து பெறப்படும் இயற்கைப் பானத்தைக் கொச்சைப்படுத்தி தடை செய்வது எப்படி நியாயம் என்று நாகேந்திரன் கேள்வி எழுப்பினார். உயிர்க்கொல்லி ரசாயனங்கள் கலந்த டாஸ்மாக் மதுவை விற்பது மட்டும் மக்கள் நலன் காக்கும் செயலாகக் கருதப்படுவதா என்றும் அவர் கேட்டார்.

கேரளா, ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களில் கள் வேளாண் விளைபொருளாக அங்கீகரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பனைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் அதற்குத் தடை விதிப்பது ஏன் என்று அவர் ஆச்சரியப்பட்டார். ஒருபுறம் களுக்குத் தடை விதித்து பனை விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் அரசு, மறுபுறம் மதுராந்தகத்தில் முதலமைச்சர் பிரச்சாரம் செய்வதற்காக மைதானம் சீரமைக்கிறோம் என்ற பெயரில் சட்டவிரோதமாக பச்சைப் பனைமரங்களை வேரோடு பிடுங்கி வெட்டிச் சாய்த்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.சில நிமிடத் தேர்தல் பிரச்சாரப் பேச்சுக்காக, பல தலைமுறைகளைக் காக்கும் மாநில மரத்தை அழிப்பதுதான் இயற்கை மற்றும் விவசாயப் பாசமா என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: ரீல்ஸ் இல்லைனா தவெக ஃப்யூஸ் போன மாதிரி! மதுராந்தகம் பிரச்சாரத்தில் தவெகவை விளாசிய எடப்பாடி பழனிசாமி!
வாயில் சுற்றுச்சூழல் பேசிவிட்டு, செயலில் பசுமைப் படுகொலை நடத்தும் தவெக அரசின் முகமூடி இதன் மூலம் முற்றிலுமாகக் கிழிந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.எனவே உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த விவசாய விரோதப் பிரமாணப் பத்திரத்தை முதலமைச்சர் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று நாகேந்திரன் வலியுறுத்தினார். பனை மற்றும் தென்னை விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் வகையில் கள் இறக்குவதற்கு உடனடியாகச் சட்டப்பூர்வ அனுமதி வழங்க வேண்டும் என்றும் அவர் கோரினார். தவறும் பட்சத்தில், ஒட்டுமொத்த விவசாயிகளையும் பனைத் தொழிலாளர்களையும் திரட்டித் தவெக அரசுக்கு எதிராக பாஜக மாபெரும் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கும் என எச்சரித்தார்.
இதையும் படிங்க: வீரமணியை காப்பாற்ற முயன்ற எவரும் தப்ப கூடாது! திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆவேச அறிக்கை!