சென்னை: இசை ஜாம்பவான் ஏ.ஆர்.ரஹ்மான் அளித்த சமீபத்திய பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை இது குறித்து கடுமையான கருத்துகளை தெரிவித்துள்ளார்.
சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர், ரஹ்மானின் கருத்துக்கு உரிமை உள்ளது என்றும், பாஜகவுக்கும் ரஹ்மானுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் கூறினார். இதற்கு திமுக எம்பி கனிமொழி ஏற்கெனவே ரஹ்மானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டியில், சினிமா துறையில் கடந்த 10 ஆண்டுகளில் அதிகார மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறியிருந்தார். இது சில தரப்பினரால் பாஜகவுடன் தொடர்புபடுத்தப்பட்டது. இதனால் சமூக வலைதளங்களில் விவாதங்கள் தீவிரமடைந்தன.
இதையும் படிங்க: திமுகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை!! நம்பிக்கையை சிதைக்க முடியாது!! அண்ணாமலை ஆவேசம்!
இந்நிலையில், அண்ணாமலை நிருபர்களிடம் பேசுகையில், "ஏ.ஆர்.ரஹ்மானை பொறுத்தவரை ஒரு இசைமேதை. தமிழத்தின் அடையாளம். இந்தியாவில் ஆஸ்கர் விருது வாங்கிய ஒரே இசையமைப்பாளர். எங்கு போனாலும் தமிழில் பேசுபவர். 'எல்லா புகழும் இறைவனுக்கு' என்று சொல்லி நம்மை பெருமைப்படுத்துபவர்" என்று புகழ்ந்தார்.
தொடர்ந்து அவர், "ரஹ்மான் பேசியதில் ஒரு வரியை எடுத்து சிலர் தேவையில்லாமல் பிரச்னை செய்கிறார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை. எல்லோருக்கும் கருத்து சொல்ல உரிமை உள்ளது. ரஹ்மான் ராமாயணம் படத்துக்கு ஹான்ஸ் சிம்மருடன் இசை அமைக்கிறார்.
அவர் எல்லா விதமான படங்களுக்கும் இசை அமைக்கிறார். அவர் சொன்னது சினிமா துறையில் அதிகார மாற்றம் குறித்த அவரது கருத்து. அது சரி, தவறு என்று நான் சொல்லவில்லை. அவருக்கு பேச உரிமை உள்ளது" என்று விளக்கினார்.

மேலும், "பாஜவுக்கும் ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் என்ன சம்பந்தம்? அவர் மீது பாஜகவுக்கு எந்த கோபமும் இல்லை. அவர் கருத்து அவருடையது. எங்கள் கருத்து எங்களுடையது. இதில் திமுக எம்பி கனிமொழிக்கு என்ன தான் பிரச்னை" என்று கேள்வி எழுப்பினார். "ரஹ்மான் விளக்கம் கொடுத்த பிறகு இந்த பிரச்னை முடிந்தது. கிரியேட்டிவ் துறையினரை புண்படுத்த வேண்டாம். அவர்கள் மக்களை மகிழ்விக்க வேண்டும்" என்றும் அண்ணாமலை வலியுறுத்தினார்.
இதற்கு திமுக எம்பி கனிமொழி ஏற்கெனவே தனது சமூக வலைதள பதிவில், "ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என்னுடைய ஆதரவை தெரிவிக்கிறேன். மதம், மொழி மற்றும் அடையாளத்திற்கு அப்பாற்பட்ட கலைகளைக் கொண்ட ஒரு இசைக்கலைஞரை வேண்டுமென்றே குறிவைத்து தாக்குவதும், இந்தியாவில் அதிகாரத்தில் இருப்பவர்களின் அதிர்ச்சியூட்டும் மவுனமும் மிகவும் கவலையளிக்கிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் இந்த நாட்டின் இசையை உலகிற்கு எடுத்துச் சென்ற ஒரு படைப்பாளி மற்றும் கலைஞர், அதே நேரத்தில் இந்தியாவின் கலாசாரம் மற்றும் இந்திய விழுமியங்களை கொண்டு சேர்த்த முன்னணி தூதரும் ஆவார். அவர் பாரபட்சம் மற்றும் வெறுப்புக்கு அல்ல, மரியாதை மற்றும் நன்றியுணர்வுக்கு தகுதியானவர். இத்தகைய சகிப்புத்தன்மையற்ற தன்மைக்கு ஒரு ஜனநாயக மற்றும் பன்முக சமூகத்தில் இடமில்லை" என்று தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தமிழக அரசியலில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் சனாதன விவகாரம் குறித்து அண்ணாமலை குறிப்பிட்டுள்ளதும் கவனம் ஈர்த்துள்ளது. ரஹ்மானின் பேட்டி சர்ச்சை அரசியல் விவாதங்களுக்கு உணவாகியுள்ள நிலையில், கலைஞர்களின் கருத்து சுதந்திரம் குறித்து பொது விவாதம் தீவிரமடைந்துள்ளது.
இதையும் படிங்க: திமுக ஆட்சியை தீயில் கரைத்து.!!! போகியோடு அனுப்பிச்சிருங்க!! அண்ணாமலை வாழ்த்தால் சர்ச்சை!