சென்னை: தமிழக மின்துறை அமைச்சர் நிர்மல்குமார், மின்வாரியத்தில் எந்தவித மறைமுக டீல்களும் இல்லாமல் முழுமையான சீரமைப்பு செய்யப்படும் என்று உறுதியளித்துள்ளார்.
சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று அமைச்சர் நிர்மல்குமார் ஆய்வுக் கூட்டம் நடத்தினார். மின்வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் இதில் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய அமைச்சர், மின்வாரியத்தின் ஒவ்வொரு பிரிவிலும் உள்ள தவறுகள் மற்றும் விதிமீறல்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.
ஒரு உதாரணத்தை மேற்கோள் காட்டிய அமைச்சர், 8 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 500 கே.வி.ஏ. டிரான்ஸ்பார்மருக்கு 13 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் கோரப்பட்டிருந்ததைச் சுட்டிக்காட்டினார். இத்தகைய முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் அந்த டெண்டரை ரத்து செய்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் கோயிலில் விதிமீறலா? அமைச்சருக்காக நடை அடைப்பில் தாமதமா? அறிக்கை கேட்கும் ஹைகோர்ட்!

சூரியசக்தி மின் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்புவோருக்கு வெளிப்படையான நடைமுறைகள் உருவாக்கப்படும் என்றும், துண்டுச் சீட்டு அல்லது பரிந்துரை மூலம் அனுமதி வழங்க முடியாது என்றும் அமைச்சர் தெளிவுபடுத்தினார். மின்வாரியத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மை மிக முக்கியம் என்று வலியுறுத்தினார்.
மேலும், திருப்பரங்குன்றம் கோவிலில் தான் தரிசனம் செய்தது தொடர்பான சர்ச்சையைப் பற்றியும் அமைச்சர் விளக்கம் அளித்தார். “கோவிலுக்குள் செல்ல 12:45 மணி வரை அனுமதி உள்ளது. அந்த நேரத்தில் தான் சென்றேன். மதியம் 2 மணி வரை தரிசனம் இருப்பதாக நிர்வாகிகள் தெரிவித்ததால் சென்றேன். எந்த விதிமீறலும் இல்லை” என்று கூறினார்.
மின்வாரியத்தை மக்களுக்கு சேவை செய்யும் திறமையான அமைப்பாக மாற்றுவதற்கான சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் நிர்மல்குமார் உறுதியளித்தார். இந்த ஆய்வுக் கூட்டம் மின்வாரியத்தில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: மாதந்தோறும் மின்கட்டண முறை எப்போது! மின்சார அமைச்சர் நிர்மல்குமார் க்ளியர்கட் பதில்!