நியூ ஜெர்ஸி: தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு தொடர்பான அவதூறு வழக்கில் எந்த சமரசமும் இல்லை என்று பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூ ஜெர்ஸியில் ‘வீ தி லீடர்ஸ்’ அமைப்பின் அறிமுகக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, டி.ஆர்.பாலு வழக்கு குறித்து விரிவாக விளக்கினார். “டி.ஆர்.பாலு நீதிமன்றத்துக்கு வந்தார். நீதிபதியையும் என்னையும் பார்த்தார்.
பிறகு, ‘இதுவரை எட்டு பேர் மீது அவதூறு வழக்கு போட்டிருக்கிறேன். ஆறு பேரிடம் மன்னிப்புக் கடிதம் வாங்கியிருக்கிறேன். ஒரு தனியார் பத்திரிகையிடம் 25 லட்சம் ரூபாய் நஷ்டஈடு பெற்றிருக்கிறேன். இது எட்டாவது வழக்கு’ என்று கூறினார்” என அண்ணாமலை நினைவுகூர்ந்தார்.
இதையும் படிங்க: தமிழை நெஞ்சில் சுமந்து வாழுங்கள்!! We the leaders தலைவர் அண்ணாமலை உருக்கமான வேண்டுகோள்!
டி.ஆர்.பாலு தனது 82 வயதையும், 50 வருட அரசியல் பயணத்தையும், 35-40 வருடங்களாக தி.மு.க. பொருளாளராக இருப்பதையும் சுட்டிக்காட்டியதாக அண்ணாமலை குறிப்பிட்டார். பின்னர் குறுக்கு விசாரணைக்குப் பிறகு, எதிர்தரப்பு வழக்கை வாபஸ் பெற்றதால் சமரசம் செய்து கொண்டதாக சிலர் கூறுவதை அவர் மறுத்தார்.

“யாரோ ஒருவர் என் மீது வழக்கு தொடர்ந்தால், அவர் வழக்கை வாபஸ் பெற்றுவிட்டால் அது எனக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? வழக்கை வாபஸ் பெறுவது அவரது உரிமை. ஆனால் என் மீது அவதூறு பரப்பியதற்கு நான் பதில் சொல்ல வேண்டும்” என்று அண்ணாமலை விளக்கினார்.
கோர்ட்டில் தான் தெளிவாகக் கூறியதாகவும், “என் மீது அவதூறு பரப்புகிறார். இன்னொரு அவதூறு வழக்கு தொடர்வேன்” என்றும் எச்சரித்ததாக அவர் தெரிவித்தார். சுப்ரீம் கோர்ட் உத்தரவு காரணமாக எதிர்தரப்பு வழக்கறிஞரின் குறுக்கு விசாரணைக்கு தனியாக வழக்கு தொடர முடியவில்லை என்றும் அண்ணாமலை சுட்டிக்காட்டினார்.
“இதுவரை நான் யார் மீது என்ன பேசினேனோ அதெல்லாம் உண்மை. தொடர்ந்து பேசுவேன். எந்த மாற்றுக் கருத்தும் இல்லை” என்று உறுதியுடன் பேசிய அண்ணாமலை, ஊழலை எப்போதும் தனிப்பட்ட முறையில் எதிர்ப்பதாகவும் வலியுறுத்தினார்.
இந்தப் பேச்சு அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. தி.மு.க. மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை அண்ணாமலை தொடர்ந்து முன்வைத்து வரும் நிலையில், அவரது இந்த உறுதியான நிலைப்பாடு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: "பொள்ளாச்சியில் புதிய அரசியல் அத்தியாயம்... களமிறங்கும் அண்ணாமலை..! மாநாட்டுக்கு ரெடியா..?