அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் தஞ்சாவூர் மாவட்டம் மற்றும் கும்பகோணம் பகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கட்சியை வலுப்படுத்துதல், டெல்டா மாவட்டங்களில் அதிமுகவின் அரசியல் நிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டன.
கூட்டத்தில் முக்கிய திருப்பமாக, சில மாவட்ட நிர்வாகிகள் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவில் இணைக்க வேண்டும் என்று நேரடியாக வலியுறுத்தினர். குறிப்பாக தஞ்சாவூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு பகுதிச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் கட்சியை மேலும் வலுப்படுத்த வேண்டுமானால் தினகரனை கட்சிக்குள் கொண்டு வருவது அவசியம் என்று அவர்கள் வாதிட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் கோரிக்கைக்கு பதிலளித்த எடப்பாடி பழனிச்சாமி, “டிடிவி தினகரன் தற்போது தனியொரு அரசியல் கட்சியை நடத்தி வருகிறார். அப்படியிருக்கும்போது அவரை எப்படி அழைத்து வந்து கட்சியில் சேர்க்க முடியும்?” என்று கேள்வி எழுப்பினார். இருப்பினும், அவர் இந்த யோசனைக்கு முழுமையாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும், விவாதம் தொடர்ந்தது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் அடுத்த ஆபத்து? செயற்குழுவை கூட்டினால் சிக்கல்? இபிஎஸ் புது திட்டம்?!
இந்த நிகழ்வு அதிமுகவுக்குள் தற்போது நிலவும் சூழலை பிரதிபலிக்கிறது. கடந்த சில மாதங்களாக அதிமுகவின் சில நிர்வாகிகள் மற்றும் முன்னாள் நிர்வாகிகள் தமிழக வெற்றி கழகம் உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், வாக்கு சிதறலைத் தடுக்கவும், அதிமுக ஆதரவு வாக்குகளை ஒருங்கிணைக்கவும் தினகரனுடன் மீண்டும் இணக்கமான உறவை உருவாக்க வேண்டும் என்ற கருத்து கட்சியின் ஒரு பகுதியினரிடம் வலுப்பெற்று வருகிறது.
டிடிவி தினகரன் அதிமுகவில் இருந்து பிரிந்து அமமுகவை தொடங்கியதிலிருந்து இரு தரப்பினருக்கும் இடையே பல கட்டங்களில் முரண்பாடுகள், கூட்டணி பேச்சுகள் மற்றும் விமர்சனங்கள் நீடித்து வருகின்றன.
இதையும் படிங்க: போறவங்க போகட்டும்..! தொண்டர்கள் இருக்காங்க.. மா. செ. கூட்டத்தில் EPS நம்பிக்கை..!