தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மற்றும் அதிமுகவின் செங்கோட்டையன் ஆகியோருக்கு அதிரடியாகப் பதிலடி கொடுக்கும் வகையில், பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழனின் எழுச்சிப் பயணம் என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஓரிக்கை பகுதியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசியல் களத்தில் உள்ள முக்கிய விவகாரங்கள் குறித்து வெளிப்படையாகப் பேசினார். ஜனநாயகக் கூட்டணி எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் தொடர்ந்து இயங்கும் என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
மத்திய அரசு தமிழகத்திற்கு என்ன செய்தது என்று தெரியாமல், அதிகார வரம்புகள் பற்றித் தெரியாமல் பொத்தம் பொதுவாகப் பேசுவது சரியல்ல என்று தமிழ்த் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்க்கு மறைமுகமாகக் குட்டு வைத்தார். "மத்திய அரசு என்னதான் கொடுத்திருக்கு, என்னவெல்லாம் கொடுக்கவில்லை என்று தெரிந்து பேசினால் நல்லா இருக்கும்," என்று அவர் விஜய்-க்கு அறிவுரை வழங்கினார்.
முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், "நயினார் நாகேந்திரன் எங்கு நின்றாலும் டெபாசிட் இழக்கச் செய்வோம்" என்று கூறியது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, "செங்கோட்டையன் எனக்கு மிகவும் வேண்டியவர். செங்கோட்டையனை விட நான் வயதில் சிறுவனாக இருந்தாலும் கூட, என்னைக் குருஜி என்றுதான் அழைப்பார். என் மீது வேறு என்ன கோபம் என்று தெரியவில்லை," என்று வேடிக்கையாகக் குறிப்பிட்ட நயினார் நாகேந்திரன், "என்னை டெபாசிட் இழக்கச் செய்வதற்கு அவர் திருநெல்வேலிக்கு வந்து போட்டிடுவாரா என்று தெரியவில்லை," என்று சவால் விடுக்கும் தொனியில் பதிலடி கொடுத்தார். அவர் ஒரு இயக்கத்தில் இணைந்திருப்பதை குறை சொல்லவில்லை என்றும், ஆனால் அந்த இயக்கம் வளர்வதற்கு முன்பாகவே ஆட்சி அமைப்போம் என்று கூறுவது எந்தவிதத்தில் நியாயம் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: "பிரதமர் மோடிக்கு செல்லாத உளவு ரிப்போர்ட் பத்திரிகைக்கு வந்தது எப்படி?" - பாஜக நயினார் நாகேந்திரன் கேள்வி
நெசவாளர் கூட்டுறவு சங்கத்தில் ஏற்பட்டிருக்கும் முறைகேடுகள் குறித்து பேசிய அவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 4 வருடங்களில் நெசவாளர்களைக் கண்டு கொள்வதுபோலவே தெரியவில்லை என்றும், ஆட்சிப் பொறுப்பேற்று நான்கே முக்கால் வருடங்கள் ஆன பிறகும் நெசவாளர்கள் மிகவும் பாதிக்கப்படுவதாகவும் கூறினார். வருடந்தோறும் நெசவாளர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதாகவும், நெசவாளர்களைக் காப்பாற்ற வேண்டிய அரசின் அடிப்படை கடமையிலிருந்து அவர்கள் தவறி இருக்கிறார்கள் என்றும் குற்றம் சாட்டினார்.
குன்றத்தூரில் நடைபெற்ற திமுக கூட்டத்தில், தி.மு.க. பிரமுகர் அணிந்து வந்த ஆடையில் சரஸ்வதி படம் இருந்தது குறித்து, "அவர்கள் ஆடையில் கடவுளுடைய புகைப்படத்தை வைத்துப் போட்டது தவறான செயலாகும். இதனை யாரும் செய்யக் கூடாது," என்று அவர் கடுமையாகக் கண்டனம் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில், மாநில தொல்லியல் துறையினர் மலை மீதுள்ள அளவுகல்லா அல்லது விளக்கேற்றும் இடமா என்று ஆய்வு மேற்கொண்டது குறித்து கேட்கப்பட்டபோது, "சில பேர் படித்திருந்தும் அறிவைப் பயன்படுத்த முடியாமல் தீபத் தூணுக்கும் எல்லைக்கல்லுக்கும் அளவு தெரியாமல் இருக்கின்றனர். அது தீபம் ஏற்றும் இடம், சில பேருக்கு இந்த வித்தியாசம் தெரியாமல் இருக்கிறது," என்று அறிவாளிகளை மறைமுகமாகக் குறிவைத்து கடுமையாக விமர்சித்தார்.
முன்னதாகக் கிராம சபை கூட்டத்தில், ஆர்பாக்கம் போன்ற பல பகுதிகளில் கல்குவாரிகள் அதிகமாக இருப்பதால் பொதுமக்களுக்கு அதிகமாக மாசடைவதாகவும், லாரிகள் செல்வதால் மாணவர்கள் பள்ளிக்குச் செல்லச் சிரமம் அடைவதாகவும் மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். பாலாற்றின் நடுவே தடுப்பணை கட்ட வேண்டும், ஏரிகளைத் தூர்வார வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. குறிப்பாக, காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூர் இடையே பாலம் வேண்டும் என்றும் கேட்டு இருக்கின்றனர். இதுகுறித்து சட்டமன்றத்தில் எடுத்துரைப்பது மட்டுமல்லாமல், ஆட்சி மாற்றம் ஏற்படும்போது தேவைக்கேற்ப நாங்களே அதனை நிறைவேற்றித் தருவோம் என்று நயினார் நாகேந்திரன் உறுதிமொழி அளித்தார். வரவிருக்கும் தேர்தலை ஒட்டி, ஜனவரி மாதம் ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி, தேர்தல் பணிகளை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: "பாஜகவில் குடியேறியவர் தானாகவே வெளியேறுவார்" - நயினார் நாகேந்திரனை விமர்சித்த ஆர்.எஸ். பாரதி!