தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (31 ஜூலை 2025) காலை அடையாறு பகுதியில் உள்ள தியோசோபிக்கல் பூங்காவில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, முன்னாள் முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ. பன்னீர்செல்வம் அவரை சந்தித்து நலம் விசாரித்தார். அடுத்தக் கட்ட அரசியல் நகர்வு குறித்து இன்று ஓ.பன்னீர் செல்வம் முக்கியமான முடிவை வெளியிடுவதாக கூறியிருந்த நிலையில், இந்த எதிர்பாராத சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம், மீண்டும் அதிமுகவில் சேர விருப்பம் காட்டியதாகவும், ஆனால், அவரை கட்சியில் சேர்க்கும் காலம் கடந்து விட்டது என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். தொடர்ந்து பாஜகவும் ஓ.பன்னீர் செல்வத்தை கண்டுகொள்ளாமல் விட்டது அவருக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. இதுபோக தமிழகம் வந்த பிரதமர் மோடியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஜிகே வாசன் உள்ளிட்டோர் சந்தித்தனர். ஆனாலும் அப்பாயிண்ட்மெண்ட் கேட்ட ஓ.பன்னீர் செல்வத்தை மோடி சந்திக்காது அவருக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்தது.
இதையும் படிங்க: உங்களை சந்தித்தாலே பெரிய பாக்கியம்.. பிரதமருக்கு ஓ.பி.எஸ் பரபரப்பு கடிதம்.. விஷயம் இதுதானோ..!!
சமீபத்தில், மத்திய அரசின் சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்திற்கு தமிழகத்திற்கு நிதி ஒதுக்கப்படாததற்கு கடும் கண்டனம் தெரிவித்து, பாஜகவுடனான தனது வழக்கமான நட்பு நிலையில் இருந்து விலகி, மத்திய அரசை விமர்சித்தார். இது அவரது அரசியல் மாற்றத்தை பறைசாற்றுகிறது. இந்த சூழலில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலினை ஓ. பன்னீர்செல்வம் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் நடைபயிற்சியின்போது ஓ.பன்னீர்செல்வம் முதல்வரை நலம் விசாரித்ததாகவும், சாதாரண உரையாடல் நடைபெற்றதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பு அரசியல் நோக்கம் கொண்டதல்ல என்றும், மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும் கூறப்படுகிறது. முன்னதாக, 2023-ல் ஓ.பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவின் போது மு.க. ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல் கூறியிருந்தார். இதேபோல், 2021-ல் பாரதியாரின் நினைவு நாளை ‘மகாகவி நாள்’ ஆக அறிவித்ததற்கு ஓ.பன்னீர்செல்வம் நன்றி தெரிவித்திருந்தார்.
இந்தச் சந்திப்பு, எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி தலைவர்களிடையே மரியாதையான உறவைப் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது. இரு தலைவர்களும் தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் முக்கியப் பங்காற்றி வருவதால், இதுபோன்ற சந்திப்புகள் பொதுமக்கள் மத்தியில் நல்லெண்ணத்தை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: திறப்புக்கு ரெடியான வின்ஃபாஸ்ட் ஆலை.. தூத்துக்குடி செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்..!!