தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக (ஓபிஎஸ் அணி) முன்னாள் அமைச்சரும் ஒரத்தநாடு தொகுதி எம்எல்ஏவுமான ஆர். வைத்திலிங்கம் இன்று (ஜனவரி 21, 2026) தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து, மகன் பிரபுவுடன் சென்னை அண்ணா அறிவாலயம் சென்று முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.
இது ஓபிஎஸ் அணிக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. டெல்டா மண்டலத்தில் அதிமுகவின் வலுவான முகமாக இருந்த வைத்திலிங்கம், ஜெயலலிதா காலத்தில் "ஐவர் குழு" உறுப்பினராகவும், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளராகவும் பதவி வகித்தவர்.
வைத்திலிங்கம் இணைப்புக்குப் பின்னால் இருக்கும் முக்கிய காரணம் தற்போது வெளியாகியுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) அணியில் தீவிர ஆதரவாளராக இருந்த அவர், ஓபிஎஸ் கூட்டணி விவகாரத்தில் (எடப்பாடி பழனிசாமியுடன் இணைவது, தனித்து போட்டியிடுவது அல்லது வேறு கூட்டணி) முடிவெடுப்பதில் ஏற்பட்ட காலதாமதம் மற்றும் தடுமாற்றத்தால் அதிருப்தி அடைந்தார்.
இதையும் படிங்க: அமித்ஷா போட்ட ப்ளான்! சப்தமில்லாமல் முடித்துவிட்ட ஸ்டாலின்! திமுக தரமான செய்கை!
"தேர்தல் நெருங்கி வருகிறது, விரைவில் முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால் ஓபிஎஸ் தரப்பில் தாமதம் ஏற்பட்டது" என்று வைத்திலிங்கம் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் தனிப்பட்ட முறையில் சேர அழைப்பு வந்தாலும், "இரு அணிகளும் ஒன்றிணைந்தால் மட்டுமே சேர்வேன்" என்று அவர் உறுதியாக இருந்தார். ஆனால் அதுவும் நடக்கவில்லை.
இதனால், அதிமுகவிலும் இல்லாமல் ஓபிஎஸ் அணியிலும் தொடர்ந்து இருந்தால் அரசியல் எதிர்காலம் இல்லை என்ற 'திரிசங்கு' நிலைக்கு ஆளானார். திமுக தரப்பில் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகள் நடந்தன. வரும் தேர்தலில் தனது மகன் பிரபுவுக்கு ஒரத்தநாடு தொகுதியில் சீட் வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய் தலைமையிலான த.வெ.க.வில் இணைய முயற்சிகள் நடந்தாலும், வைத்திலிங்கம் அதை விரும்பவில்லை. இறுதியில், "திமுக தான் அண்ணா தொடங்கிய தாய் கழகம். ஸ்டாலின் மக்கள் நல முதல்வர். அதிமுக சர்வாதிகாரமாக செயல்படுகிறது" என்று கூறி திமுகவை தேர்ந்தெடுத்தார்.
இணைப்புடன் வெல்லமண்டி நடராஜன், குன்னம் ராமச்சந்திரன் உள்ளிட்டோரும் திமுகவில் இணைய உள்ளனர். ஓபிஎஸ் அணியில் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 2-ஆக சுருங்கியுள்ளது. ஓபிஎஸ் பாஜக மூலம் அதிமுக கூட்டணியில் இணைய முயன்றாலும், டிடிவி தினகரனுக்கு மதுராந்தகம் பொதுக்கூட்ட அழைப்பு வந்துள்ள நிலையில் ஓபிஎஸ்-க்கு இல்லை. இது ஓபிஎஸ் அணியின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் வலுவான செல்வாக்கு கொண்ட வைத்திலிங்கத்தின் இணைப்பு திமுகவுக்கு பெரும் வலிமை சேர்க்கும். அதிமுக - பாஜக கூட்டணி திட்டங்கள் குலைந்துள்ள நிலையில், தமிழக அரசியல் களம் மேலும் சூடுபிடித்துள்ளது!
இதையும் படிங்க: கேம் சேஞ்சர் ஸ்டாலின்!! அதிமுகவை மொத்தமாக வளைத்துப் போடும் திமுக! மாஸ்டர் ப்ளான்!