தமிழக அரசியலில் வரலாற்று திருப்பம்! அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மூன்று முறை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) இன்று (பிப்ரவரி 27, 2026) சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார். அவருடன் அவரது மகன் ரவீந்திரநாத் (முன்னாள் எம்பி) மற்றும் உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ ஐயப்பனும் கட்சியில் இணைந்தனர்.
முதல்வர் ஸ்டாலின் ஓபிஎஸ்ஐயை பூங்கொத்து கொடுத்து வரவேற்று, கட்சித் துண்டு அணிவித்து சிறப்பு மரியாதை செய்தார். இணைந்த பிறகு ஓபிஎஸ், "திராவிட இயக்கத்தை காப்பாற்ற திமுகவே சரியானது. ஸ்டாலின் அவர்கள் நல்ல ஆட்சி அமைத்துள்ளார். நான் கட்சி தொண்டனாக இணைந்துள்ளேன்" எனக் கூறினார்.
தகவல்களின்படி, ஓபிஎஸ்ஐக்கு திமுகவில் துணைப் பொதுச்செயலாளர் பதவி வழங்கப்படவுள்ளது. தற்போது திமுகவில் ஐ.பெரியசாமி, திருச்சி சிவா, கனிமொழி உள்ளிட்டோர் துணைப் பொதுச்செயலாளர்களாக உள்ள நிலையில், ஓபிஎஸ்ஐயின் வருகையால் இந்த பதவி எண்ணிக்கை அதிகரிக்கலாம்.
இதையும் படிங்க: மார்ச் 1ல் தமிழகம் வருகிறார் மோடி!! இதோ முழு பயண திட்டம்!! திருப்பரங்குன்றம் விசிட் கன்ஃபார்ம்?!! பாஜக உற்சாகம்!

மேலும், அவருக்கு போடி தொகுதியில் (தேனி மாவட்டம்) மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2021 தேர்தலில் போடியில் வென்றவர் ஓபிஎஸ் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது மகன் ரவீந்திரநாத்துக்கும், ஐயப்பனுக்கும் தக்க தொகுதிகளில் டிக்கெட் வழங்கப்பட வாய்ப்புள்ளது.
2026 சட்டமன்ற தேர்தல் தேதி ஓரிரு வாரங்களில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், ஓபிஎஸ் இணைவது திமுக கூட்டணிக்கு பெரும் வலு சேர்க்கும். தென்மாவட்டங்களில் அதிமுகவின் வாக்கு வங்கியை பலவீனப்படுத்தி, திமுகவின் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
ஏற்கெனவே ஸ்டாலின் அரசின் நலத்திட்டங்களை புகழ்ந்து வந்த ஓபிஎஸ், தற்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடனான மோதலால் நீக்கப்பட்ட பிறகு தனி அணியாக செயல்பட்டு வந்தார்.
இந்த இணைப்பு அதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சியாக அமைந்துள்ளது. திமுகவின் 'திராவிட மாடல்' ஆட்சியை வலுப்படுத்தும் வகையில் ஓபிஎஸ்ஐயின் வருகை இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசியல் களம் இப்போது மிகவும் சூடுபிடித்துள்ளது – 2026 தேர்தலில் பெரும் மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன!
இதையும் படிங்க: ஒருபோதும் பொறுத்துக்க முடியாது! அஞ்சாம செயல்படுங்க! தமிழக அதிகாரிகளுக்கு தேர்தல் கமிஷன் அட்வைஸ்!