சென்னை: “டிசம்பர் 15-க்குள் அதிமுக ஒன்றிணைந்து முந்தைய பலத்தை மீட்டெடுக்காவிட்டால், நான் ஒரு மாபெரும் முடிவு எடுப்பேன்” என்று கடந்த நவம்பர் 24-ல் வேப்பேரியில் குண்டைத் தூக்கிப் போட்ட முன்னாள் முதல்வரும் அதிமுக உரிமை மீட்புக் குழுத் தலைவருமான ஓ.பன்னீர்செல்வம், அதை நிரூபிக்கும் வகையில் நேற்று டெல்லி பறந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார். சுமார் 20 நிமிடங்கள் நடந்த இந்த ரகசியச் சந்திப்பு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேப்பேரி கூட்டத்தில் ஓபிஎஸ் தெளிவாகவே எச்சரித்திருந்தார். “2019, 2021, 2024 என மூன்று தேர்தல்களிலும் அதிமுக தொடர் தோல்வி... இப்படியே போனால் கட்சி அழிந்துவிடும். முன்பு இருந்தது போல் ஒன்றுபட வேண்டும். இல்லையென்றால் டிசம்பர் 15-க்குள் முக்கிய முடிவு எடுக்கப்படும்” என்று கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து டெல்லி சென்று அமித் ஷாவைச் சந்தித்திருப்பது, அந்த “முக்கிய முடிவு” எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை நிர்பந்தப்படுத்துவதற்கான அழுத்தமாகவே பார்க்கப்படுகிறது.
அரசியல் வட்டாரத்தில் பரவும் தகவல்களின்படி, இந்தச் சந்திப்பில் அதிமுக ஒருங்கிணைப்பு, 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக-ஓபிஎஸ் இணைந்து செயல்படுவது, தேவைப்பட்டால் புதிய அணி அல்லது தனிக்கட்சி தொடங்குவது உள்ளிட்ட விஷயங்கள் பேசப்பட்டிருக்கலாம். இன்று கூடுதலாக பாஜகவின் மற்ற மூத்த தலைவர்களையும் ஓபிஎஸ் சந்திக்கவிருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க: திமுக முயற்சிக்கு வேட்டு! தேமுதிகவை தூண்டில் போட்டு வளைத்த பாஜக! முடிச்சாச்சு டீல்!

2022-ல் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தனித்து நின்ற ஓபிஎஸ், 2024 லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் ராமநாதபுரத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதற்குப் பிறகு “அதிமுகவை மீட்டெடுப்பேன்” என்று தொடர்ந்து போராடி வருகிறார்.
ஆனால் எடப்பாடி தரப்பு “ஒருங்கிணைப்புக்கு எந்த வாய்ப்பும் இல்லை” என்று திட்டவட்டமாக மறுத்து வருகிறது. இந்தச் சூழலில் அமித் ஷாவைச் சந்தித்திருப்பது, “ஒன்றிணைப்பு இல்லையென்றால் பாஜகவுடன் மீண்டும் இணைந்து புதிய அஸ்திரத்தை ஏவலாம்” என்ற எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகிறது.
டெல்லி பயணத்துக்குப் பிறகு ஓபிஎஸ் என்ன முடிவு எடுப்பார் என்பதைத் தமிழகமே உற்று நோக்கியுள்ளது. அதிமுக ஒன்றிணைப்பா? பாஜக கூட்டணியில் மீண்டும் இணைவாரா? அல்லது புதிய கட்சி தொடங்கி புதிய அரசியல் பயணத்தைத் தொடங்குவாரா? டிசம்பர் 15 வரை தமிழக அரசியல் களம் முழுவதும் இந்தக் கேள்வியைச் சுற்றியே இருக்கும்.
இதையும் படிங்க: திமுகவை கடுப்பேத்தும் பாஜகவின் ‘சூப்பர் பிளான்’! டெல்லி வரை பறக்கும் ரிப்போர்ட்! “மாஸ்டர் ஸ்ட்ரோக்”!