தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 களம் சூடுபிடித்து வரும் நிலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) வெளியிட்டுள்ள பேச்சு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக - பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் தன்னை சேர்க்க டிடிவி தினகரன் உட்பட யாரும் அழைக்கவில்லை என்று ஓபிஎஸ் தெளிவாகத் தெரிவித்துள்ளார். அதிமுக ஒன்றிணைவது ஆண்டவன் கையில் மட்டுமே உள்ளது என்றும், கூட்டணி தொடர்பான கேள்விகளுக்கு உரிய நேரத்தில் பதில் அளிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், "பிரிந்துள்ள அதிமுகவின் அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் எங்கள் ஒரே கோரிக்கை. வேறு எந்த கோரிக்கையும் இல்லை" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஒத்தையில நிக்கிறாரு ஓபிஎஸ்!! அடுத்த விக்கெட்டும் அவுட்!! டிடிவி தினகரன் பக்கத்துல யாரு தெரியுதா?
அமமுக தலைவர் டிடிவி தினகரன் என்டிஏ கூட்டணியில் இணைந்த நிலையில், ஓபிஎஸ் முடிவு என்ன என்ற கேள்வி எழுந்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமி ஓபிஎஸ் தரப்பை சேர்க்க பிடிவாதமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஓபிஎஸ் இன்னும் அதிமுகவை கைப்பற்ற நீதிமன்றத்தில் வழக்கு நடத்தி வருவதால், அவரை சேர்ப்பதில் தயக்கம் நீடிக்கிறது.

தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகளை முழுமையாக அறுவடை செய்ய ஓபிஎஸ் அவசியம் என்ற நிலை உள்ளது. பாஜகவுக்கு ஓபிஎஸ் தேவை அதிகம். ஏற்கனவே முத்தரையர் வாக்குகளை திமுக முழுமையாக பெற திட்டமிட்டுள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் திமுகவை வீழ்த்துவது கடினமாக இருக்கும். எனவே எடப்பாடி பழனிசாமி தலைமையை ஏற்க ஓபிஎஸ் ஒப்புக்கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையே நடிகர் விஜய்யின் தவெக தரப்பும் ஓபிஎஸ் மற்றும் ராமதாஸ் ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. செங்கோட்டையன் மூலமாக இந்த பேச்சுகள் நடைபெறுவதாகக் கூறப்படுகிறது.
ஓபிஎஸ் தரப்பு என்டிஏவில் இணையுமா அல்லது வேறு பாதையை தேர்வு செய்யுமா என்பது தேர்தல் அறிவிப்புக்கு முன்பே தெரிந்துவிடும். தமிழக அரசியலில் ஓபிஎஸ்ஸின் அடுத்த கட்ட முடிவு பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க: அமமுகவுக்கு 9 தொகுதி?! டிடிவி தினகரனுக்கு அமித்ஷா கொடுத்த ஆஃபர்?! கூட்டணி கணக்கு!