தமிழ்நாடு அரசு மக்களுக்கு அரசு சேவைகளை எளிதாகவும் விரைவாகவும் வழங்குவதற்காக ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களை கடந்த ஜூலை 15ம் தேதி முதல் நவம்பர் 2025 வரை மாநிலம் முழுவதும் நடத்தி வருகிறது. இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் தொடங்கி வைத்தார். இம்முகாம்கள் மூலம் அரசு துறைகளின் 43 முதல் 46 சேவைகள் நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில் வழங்கப்படுகின்றன.

இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், மக்களின் குறைகளை அவர்களது இருப்பிடங்களுக்கு அருகிலேயே சென்று தீர்வு காண்பது. சாதிச் சான்று, பட்டா மாற்றம், மகளிர் உரிமைத் தொகை, ஆதார் திருத்தம், ரேஷன் அட்டை மாற்றம், மருத்துவ காப்பீட்டு அட்டை உள்ளிட்ட பல சேவைகள் இம்முகாம்களில் உடனடியாக வழங்கப்படுகின்றன. குறிப்பாக, கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு தகுதியுள்ளவர்கள் இம்முகாம்களில் விண்ணப்பிக்கலாம், மேலும் 45 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதையும் படிங்க: எல்லாம் சரி... தரமா இருக்கா முதல்வரே? காலை உணவு திட்டத்தை விமர்சித்த அதிமுக..!
தமிழ்நாடு முழுவதும் 10,000 முகாம்கள் நடத்தப்படுகின்றன, இதில் சென்னையில் 400 முகாம்கள் உள்ளடங்கும். ஒவ்வொரு முகாமும் காலை 9 முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகிறது. மக்களுக்கு தகவல் தெரிவிக்க, 1 லட்சம் தன்னார்வலர்கள் வீடு வீடாகச் சென்று விண்ணப்பப் படிவங்களையும் விழிப்புணர்வு கையேடுகளையும் வழங்குகின்றனர். மேலும், முகாம்களில் மருத்துவ சேவைகளும் வழங்கப்படுகின்றன.
இத்திட்டத்திற்காக பிரத்யேக இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது, இதன் மூலம் மக்கள் முகாம்களின் இடம் மற்றும் சேவைகள் குறித்த விவரங்களை அறியலாம். தமிழக அரசின் இந்த முயற்சி, மக்களுக்கு அரசு சேவைகளை வெளிப்படையாகவும் எளிமையாகவும் வழங்குவதற்கு முக்கிய பங்காற்றுகிறது. பொதுமக்கள் இம்முகாம்களில் பங்கேற்று, தங்கள் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு பெற அரசு அழைப்பு விடுத்துள்ளது.
https://x.com/i/status/1961328440881430796
இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை ஆற்றில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்கள் மிதந்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்தின் கீழடி, கொந்தகை, நெல் முடிகரை, மடப்புரம் ஆகிய பகுதிகளில் நடந்த முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் ஆற்றில் மிதந்து வந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கார்த்திக் என்பவர் காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து, போலீசார் ஆற்றில் மிதந்த மனுக்களை மீட்டு, அவற்றை வீசியவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மனுக்களுக்கு இன்னும் தீர்வு காணப்படவில்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சிகள் இதை சமூக வலைதளங்களில் விமர்சித்து, திமுக அரசின் நிர்வாகத் திறனை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர். மேலும் மனுக்களை உரிய முறையில் கையாள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இத்திட்டத்தின் மூலம் இதுவரை 30 லட்சம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், 13.7 லட்சம் மனுக்கள் மகளிர் உரிமைத் தொகைக்காகவும் பெறப்பட்டுள்ளதாகவும் அரசு தெரிவித்துள்ளது. இச்சம்பவம் திட்டத்தின் நம்பகத்தன்மையை பாதிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு அ.தி.மு.க. சார்பில் அதன் சமூக வலைதள பக்கத்தில் கடும் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான அந்த பதிவில், “பொதுமக்கள் அளித்த மனுக்களை தூக்கி எறிந்த திமுக அரசை 2026 தேர்தலில் பொதுமக்கள் தூக்கி எறிவார்கள்”என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சியினர் சமூக வலைதளங்களில் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆம்புலன்ஸை தாக்கினால் 10 வருஷம் ஜெயில்... தமிழக அரசு எச்சரிக்கை..!