வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக மற்றும் பாஜக இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தைகள் வேகம் பிடித்துள்ளன. இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இம்மாத இறுதியில் தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று (ஜனவரி 9) சென்னையில் அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில் அதிமுக துணைப் பொதுச்செயலர் முனுசாமி, பாஜக மாநில துணைத் தலைவர்கள் ராமலிங்கம், சக்கரவர்த்தி, ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பிரதமர் மோடி இம்மாத இறுதியில் தமிழகம் வருவது குறித்தும், அவரது பொதுக்கூட்டத்தை சென்னையில் அல்லது மதுரையில் நடத்துவது குறித்தும் இரு தரப்பும் விவாதித்தனர். குறிப்பாக, மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் பொதுக்கூட்டம் நடத்தி, அங்குள்ள சுவாமி திருப்பரங்குன்றம் கோவிலில் பிரதமர் சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என பாஜக தரப்பு வலியுறுத்தி வருகிறது.
இதையும் படிங்க: டெல்லி புறப்பட்டார் எடப்பாடி! யாருக்கு எத்தனை தொகுதி? அமித்ஷாவுடன் அடுத்த மீட்டிங்!!
கடந்த ஜனவரி 7-ம் தேதி பாமக கூட்டணியில் இணைந்ததைத் தொடர்ந்து, பழனிசாமி டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார்.

அப்போது தொகுதி பங்கீடு, கொங்கு மண்டலம், தென் மாவட்டங்கள், தென்சென்னை போன்ற பகுதிகளில் அதிக இடங்கள், ஆட்சியில் பங்கு, மூன்று அமைச்சர் பதவிகள் உள்ளிட்ட கோரிக்கைகளை அதிமுக வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின.
பொங்கல் பண்டிகை முடிந்ததும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளரும் மத்திய அமைச்சருமான பியுஷ் கோயல் சென்னை வர உள்ளார். அப்போது பாஜகவுக்கான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நயினார் நாகேந்திரன் சந்திப்புக்குப் பின் அளித்த பேட்டியில், “பழனிசாமியுடன் நடந்த பேச்சு சுமுகமாக அமைந்தது. பிரதமர் மோடி இம்மாத இறுதியில் தமிழகம் வருகிறார். தேதி இன்னும் முடிவாகவில்லை. அந்த பொதுக்கூட்டத்தை சென்னை அல்லது மதுரையில் நடத்துவது குறித்து விவாதித்தோம்” என்றார்.
திருப்பரங்குன்றம் கோவில் தீப விவகாரத்தில் சமீபத்தில் நீதிமன்றம் ஆணை பிறப்பித்த நிலையில், இந்த பகுதியில் பிரதமர் வருகை மேலும் அரசியல் சூடு ஏற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூட்டணி கட்சி தலைவர்களை ஒரே மேடையில் ஏற்றி வலுவான தோற்றத்தை ஏற்படுத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
இதையும் படிங்க: பாமகவுக்கு 17 தொகுதி?! ஒரு எம்.பி சீட்?! படிந்தது பேரம்! வெளியானது முக்கிய அப்டேட்!!